இப்படி ஒரு பிரதமரா.? உலக வல்லரசு நாடுகளே மோடியை வியந்து திரும்பி பார்க்கிறது.! ராமதாஸ் பெருமிதம்
10.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்காத திமுகவிற்கு வாக்குகள் மூலம் தண்டனை அளிக்க வேண்டும் என தெரிவித்த ராமதாஸ், பாஜகவுக்கு அளிக்கின்ற வாக்கு தான் நீங்கள் திமுகவுக்கு அளிக்கின்ற தண்டனை, இனிமேல் திராவிட கட்சிகளில் ஆட்சி வேண்டாம் என கூறினார்.
உலக நாடுகளே திரும்பி பார்க்கிறது
திருவண்ணாமலை நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனை ஆதரித்து காந்தி சிலை அருகே நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டார். அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய அவர், உலகமே வியந்து இப்படி ஒரு தலைவனா.? இப்படி ஒரு பிரதமரா.?என ஆச்சரியப்படக் கூடிய வகையில் வல்லரசு நாடுகள் தலைவர்கள் எல்லாம் பிரதமர் மோடியை திரும்பி பார்க்கிறது.
எனவே பிரதமர் மோடியே மூன்றாவது முறையாக பிரதமராகத்தான் வரப்போகிறார் என்றும் தெரிவித்தார். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் திருவண்ணாமலையில் வெற்றி பெறுவது உறுதி என கூறிய அவர், திருவண்ணாமலைக்கு பயோ எத்தனால் தொழிற்சாலை, விமானம் நிலையம் கிரிவலப் பாதை மேம்படும் என்று பல திட்டங்களை தனது தேர்தல் அறிக்கையாக வேட்பாளர் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
டாஸ்மாக்கில் கஞ்சா இலவசம்
இதை முன்வைத்து வாக்கு கேட்க வேண்டும் என்றும்,திமுகவினர் என்ன சொல்லி வாக்கு கேட்பார்கள் என கேள்வி எழுப்பிய ராமதாஸ், டாஸ்மாக்கில் இலவசமாக கஞ்சா பொட்டலங்கள் தருவதாக சொல்லி வாக்கு கேட்பார்களா என்றும், தற்போதைய திமுக அரசு டாஸ்மார்க் கடை வருமானத்தில் தான் தமிழக அரசு ஆட்சி நடத்தி வருவதாகவும் ராமதாஸ் குற்றம் சாட்டினார். மேலும் இன்றைக்கு ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் உட்பட பல்வேறு துறை சார்ந்தவர்கள் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கொதித்தெழுந்து போராட்டம் நடத்தி வருவதாகவும், என்றைக்குமே கோட்டைக்கு போகாத நான் வன்னிய மக்களின் 10.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டுக்காக முதல் முறையாக கோட்டைக்குச் சென்றேன் என்றும் பலமுறை வலியுறுத்தியும் இந்த கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தார்.
திமுகவிற்கு தண்டனை கொடுக்கனும்
ராமதாஸ் கோட்டைக்கு வரப் போகிறார் என்று கோட்டை வட்டாரமே திணறியது, ஆனாலும் இட ஒதுக்கீட்டுக்காக நான் மௌனமாக இருந்தேன் கடைசிவரை இட ஒதுக்கீட்டை திமுக அரசு நிறைவேற்ற வில்லை என ராமதாஸ் தெரிவித்தார். 10.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்காத திமுகவிற்கு வாக்குகள் மூலம் தண்டனை அளிக்க வேண்டும் என தெரிவித்த அவர், பாஜகவுக்கு அளிக்கின்ற வாக்கு தான் நீங்கள் திமுகவுக்கு அளிக்கின்ற தண்டனை, இனிமேல் திராவிட கட்சிகளில் ஆட்சி வேண்டாம் என கூறினார்.
கடந்த காலங்களில் திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு சென்று என்ன செய்தார்கள் என கேள்வி எழுப்பியவர், மூன்றாவது முறையாக மோடி அரசு தான் ஆட்சி அமைக்கப் போகிறது என்றும் ஆகவே உங்கள் தொகுதிக்கான நலத்திட்டங்களை நேரடியாக பெற்று செயல்படுத்த பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு வாக்களியுங்கள் என ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.