நீட் தேர்வில் 3 பாடங்களில் இரண்டில் பூஜ்ஜியம் அல்லது அதைவிட குறைவாக மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்குக்கூட மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது. இது கல்வியை கடைச்சரக்காக விற்கும் செயல். நீட் தேர்வை ஒழிக்க இந்த ஒரு காரணமே போதும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவக் கல்வி வணிகமயமாவதைத் தடுக்கவும், அதன் தரத்தை உயர்த்தவும்தான் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்து வரும் நிலையில், அது முற்றிலும் பொய் என்பதை புள்ளி விவரங்கள் நிரூபித்திருக்கின்றன.

நீட் தேர்வில் 3 பாடங்களில் இரண்டில் ‘0’ அல்லது அதைவிட குறைவாக மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு கூட மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது என்பது தான் புள்ளிவிவரம் சொல்லும் சேதியாகும். இது கல்வியை கடைச்சரக்காக விற்கும் செயல் ஆகும்.

2017ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் மொத்த மதிப்பெண்கள் 720-க்கு 150-க்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களின் பாடவாரியான நீட் தேர்வு மதிப்பெண்களை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் ஆய்வு செய்தது. அதில் நீட் தேர்வில் 150-க்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்று தேசிய தரவரிசையில் 5,30,000-க்கும் பிந்தைய இடத்தை பிடித்தவர்களில் 1,990 பேர் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

இவர்களில் 530 பேர் இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் ஒற்றை இலக்க மதிப்பெண்கள் எடுத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கு சுமார் 60,000 இடங்கள் மட்டுமே இருந்தன. தகுதி அடிப்படையில் இந்த இடங்கள் நிரப்பப்பட்டிருந்தால் தரவரிசையில் முதல் 75,000 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு மட்டும் தான் வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். ஆனால், தரவரிசையில் 50,000-க்குள் வந்த பலருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளிலோ, தனியார் மருத்துவக் கல்லூரிகளிலுள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களிலோ வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேநேரத்தில் தரவரிசையில் 5.30 லட்சத்திற்கும் கீழ் ஆறரை லட்சமாவது இடத்தைப் பிடித்தவர்களுக்குக் கூட தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவ இடம் கிடைத்துள்ளது.

இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் 180-க்கு பத்துக்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களால் மருத்துவக் கல்வியை எவ்வாறு கற்க முடியும்? நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை வாழ வைப்பதற்காக மட்டுமே நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது இந்த புள்ளிவிவரங்கள் மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது. இத்தகைய முறையில் மருத்துவப் படிப்பின் தரத்தை எந்த வகையிலும் உயர்த்த முடியாது.

ஓட்டைகள் நிறைந்த நீட் தேர்வை ரத்து செய்ய இதை விட சிறந்த காரணம் தேவையில்லை. எனவே, அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி இடங்களுக்கு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நிகர்நிலைப் பல்கலைக்கழக இடங்களுக்கு மட்டும் கடுமையான விதிகளுடன் நீட் தேர்வை நடத்த வேண்டும். அப்போது தான் மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்த முடியும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.