அவங்க எடுத்த சோக முடிவு!, எஞ்சியுள்ள ஊர்க்காவல்படையினருக்காவது குடும்பத்தை காப்பாற்றும் அளவுக்கு ஊதியம் கொடுங்கள் என ராமதாஸ் உருக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஊரைக் காப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஊர்க்காவல்படையின் வீரர் ஒருவர் தமது சொந்தக் குடும்பத்தைக் காப்பாற்ற முடியாமல் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். வறுமையின் உச்சத்தில் அந்த ஊர்க்காவல்படை வீரர் எடுத்த சோக முடிவு, எஞ்சியுள்ள ஊர்க்காவல்படையினருக்காவது குடும்பத்தை காப்பாற்றும் அளவுக்கு ஊதியம் கொடுங்கள் என்ற செய்தியைத் தான் வெளிப்படுத்துகிறது.

மதுரை மாவட்டம் செக்கானூரணியை அடுத்த பூவரசம்பட்டியைச் சேர்ந்த சிவராஜா 7 ஆண்டுகளாக ஊர்க்காவல்படையில் பணியாற்றி வந்திருக்கிறார். அதற்காக அவருக்கு அளிக்கப்பட்ட மதிப்பூதியம் குடும்பத்தைக் காப்பாற்றும் அளவுக்கு இல்லாததால், தாம் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது சோக முடிவு மதுரை மாவட்டம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் ஊர்க்காவல்படையினரை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிவராஜாவின் தற்கொலை முடிவு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றாலும் கூட, தமது தற்கொலைக்காக அவர் கூறியுள்ள கருத்துகள் மிகவும் சரியானவை தான். சிவராஜாவின் தற்கொலையை தனிப்பட்ட ஒரு மனிதர் வறுமையில் எடுத்த தவறான முடிவாக பார்த்து விட்டு, விலகிச் சென்று விடக் கூடாது. சிவராஜாவை பணியிலிருந்தும் வறுமையில் வாடும் ஊர்க்காவல்படை வீரர்களின் பிரதிநிதியாகத் தான் பார்க்க வேண்டும். பொதுவாகவே ஊர்க்காவல்படையில் பணியாற்றும் இளைஞர்கள் காவல் துறைக்கு இணையாக பணி செய்ய வேண்டியிருக்கும். ஆனால், அவர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் மிகவும் குறைவு என்பதால் அவர்களால் குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியவில்லை.

ஊர்க்காவல் படையினருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.152 வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.2,800 ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று ஊர்க்காவல் படையினர் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்களின் ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.560 ஆக உயர்த்தி ஆணையிட்டது. இதன்மூலம் ஊர்க்காவல்படை வீரர்கள் அனுபவித்து வந்த பொருளாதார நெருக்கடிகள் அகலும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை 2017-ஆம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு ரூ.560 ஆக உயர்த்திய தமிழக அரசு, அவர்களின் அதிகாரப்பூர்வ பணி நாட்களின் எண்ணிக்கையை 25-லிருந்து ஐந்து நாட்களாக குறைந்து விட்டது.

இதனால் அவர்களுக்கான தினக்கூலி 3 மடங்குக்கும் மேல் அதிகரித்தாலும் கூட மாத ஊதியம் ரூ.2,800 என்ற அளவைத் தாண்டவில்லை. ஊர்க்காவல் படையினருக்கு அதிகாரபூர்வ பணி நாட்கள் 5 தான் என்றாலும் மாதத்தின் அனைத்து நாட்களும் பணிக்கு வர வேண்டியிருக்கும். இதனால் அவர்களின் அடிப்படை ஊதியம் உயர்த்தப்பட்டாலும் மொத்த ஊதியம் அதே அளவில் தான் நீடிக்கிறது. மாத ஊதியம் 2800 ரூபாயை வைத்துக் கொண்டு எவராலும் குடும்பம் நடத்தவோ, குழந்தைகளை வளர்த்தெடுத்து படிக்க வைக்கவோ முடியாது. அதனால் தான் சிவராஜா தற்கொலை செய்து கொண்டார்.

தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க உதவி செய்வதிலும், நெருக்கடி காலங்களில் உதவுவதிலும் ஊர்க்காவல் படையினரின் பங்கு ஈடு இணையற்றது ஆகும். தமிழ்நாடு முழுவதும் 142 படை அணிகளில் 2,805 பெண்கள் உட்பட மொத்தம் 15,622 பேர் பணியாற்றுகின்றனர். கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போதும், 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போதும் ஊர்க்காவல் படையினர் ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றவை என்று சட்டப்பேரவையில் கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவே பாராட்டியுள்ளார். அவ்வாறு இருக்கும்போது அவர்களுக்கு மாதம் ரூ.2,800 மட்டும் ஊதியம் வழங்குவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஊர்க்காவல் படையினருக்கு ரூ.18,000 வரை மாத ஊதியம் வழங்கப்படுகிறது. ஊர்க்காவல் படையினரை காவல்துறையின் அங்கமாக மாற்ற வேண்டும் என்பது தான் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். உடனடியாக அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை என்றாலும், அவர்களை பணி நிலைப்பு செய்து, கவுரவமான அடிப்படை ஊதியம் நிர்ணயித்து காலமுறை ஊதியம் வழங்க அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன் என இவ்வாறு அதில் கூறியுள்ளார்.