காவிரியில் தண்ணீர் திறப்பதை நிறுத்த ஆணையம் உத்தரவிட கூடாது.!அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்-ராமதாஸ்
காவிரி சிக்கலில் கர்நாடகத்தின் அனைத்து சதிகளையும் தமிழ்நாடு முறியடித்தாக வேண்டும். அது குறித்து விவாதிப்பதற்காக தமிழக அரசும் அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
காவிரி நீர் பிரச்சனை
காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறப்பது தொடர்பாக பாமக நிறுனவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது என்றும், காவிரியில் வினாடிக்கு 10,000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடும்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த ஆணையை ரத்து செய்யும்படி மேல்முறையீடு செய்யப் போவதாகவும் கர்நாடக துணை முதலமைச்சரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார். காவிரியில் தண்ணீர் இல்லாததால் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பயிர்கள் கருகி வரும் நிலையில் மனிதநேயம் இல்லாமல் கர்நாடக துணை முதலமைச்சர் பேசி வருவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
காவிரி படுகையில் காயும் குறுவை நெற்பயிர்களை காப்பாற்ற குறைந்தது 50 டி.எம்.சி தண்ணீராவது தேவை. ஆனால், வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்க காவிரி ஆணையம் ஆணையிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டுக்கு சுமார் 12 டி.எம்.சி அளவுக்கு மட்டுமே தண்ணீர் கிடைக்கும். இதுவே போதுமானதல்ல எனும் போது, இந்த நீரையும் நிறுத்தக் கோருவது நியாயமற்றது. தமிழகத்திற்கு 10 டி.எம்.சி தண்ணீர் திறக்க ஆணையிட்டிருப்பதாக முதல் நாள் தெரிவித்த கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், அடுத்த நாளே தமிழகத்திற்கு தண்ணீரை நிறுத்த வேண்டும் என்று காவிரி ஆணையத்திற்கு கோரிக்கை விடுப்பதில் இருந்தே, இந்த விவகாரத்தில் கர்நாடக மாநில அரசு இரட்டை வேடம் போடுவதை தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்திற்கு தண்ணீர் நிறுத்த வேண்டும்
கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் இன்றைய நிலவரப்படி 87 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. கர்நாடகத்தில் வேளாண் பருவம் இன்னும் தொடங்கவில்லை என்பதால் உடனடியாக தண்ணீர் தேவையில்லை. அதனால், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தாராளமாக வழங்கலாம். ஆனால், கர்நாடகத்தின் கடந்த சில நாட்களாக செய்யப்படும் உள்ளூர் அரசியல் காரணமாக தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க அம்மாநில துணை முதலமைச்சர் சிவக்குமார் மறுக்கிறார். இது காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும்.
காவிரியில் தண்ணீர் திறப்பதை நிறுத்த வேண்டும் என்று கர்நாடக அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டால், அதை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஏற்கக் கூடாது. இது தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தமிழக அரசு உரிய முறையில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறப்பதை நிறுத்துவதற்காக கர்நாடக அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு விழிப்புடன் செயல்பட்டு தடுக்க வேண்டும்.
வழக்கு விசாரணை விரைவு படுத்திடுக
தமிழ்நாட்டுக்கு காவிரியில் கூடுதல் நீர் திறக்க கர்நாடகத்திற்கு ஆணையிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் கடந்த திங்கள்கிழமையே வழக்கு தொடரப்பட்டு விட்டது. ஆனால், அதன்பின் 5 நாட்களாகியும் அந்த வழக்கு இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படவில்லை. காவிரியில் கூடுதல் தண்ணீர் பெறுவதில் செய்யப்படும் ஒவ்வொரு நாள் தாமதமும் காவிரி படுகை உழவர்களுக்கு சரி செய்ய முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும். எனவே, உச்சநீதிமன்றத்தின் உரிய அமர்வில் முறையீடு செய்து கூடுதல் தண்ணீர் திறக்கக்கோரும் வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் தரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் கர்நாடக அரசு, அதுபற்றி விவாதிக்க விரைவில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்துள்ளது. காவிரி சிக்கலில் கர்நாடகத்தின் அனைத்து சதிகளையும் தமிழ்நாடு முறியடித்தாக வேண்டும். அது குறித்து விவாதிப்பதற்காக தமிழக அரசும் அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.