விஜயின் சமூக பொறுப்புணர்வு மிக்க செயலை எடுத்துரைத்து, சர்கார் படத்தில் புகைபிடிக்கும் காட்சிகளை நீக்குமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

புகையிலை மற்றும் மதுவுக்கு எதிராக நீண்ட காலமாக போராடி வருபவர் பாமக நிறுவனர் ராமதாஸ். தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட ரஜினிகாந்த் படங்களில் அவர் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றபோது ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். அதேமாதிரியான எதிர்ப்புகளை இன்றுவரை முன்வைத்து கொண்டுதான் இருக்கிறார் ராமதாஸ்.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் விஜயின் 62வது படத்திற்கு சர்கார் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. அந்த போஸ்டர் விஜய் சிகரெட் பிடிப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. 

அதை கண்டதும், சிகரெட் இல்லாமல் மேலும் அழகாக இருப்பீர்கள் விஜய் என ஆலோசனை கூறிய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, விஜய்க்கு கண்டனத்தையும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், இன்று இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கையில் வெளியிட்டுள்ளார். அதில், பிஞ்சுகளின் நஞ்சை விதைப்பது போன்று அமைந்துள்ளது விஜய் பட போஸ்டர். புகைப்பது உடலுக்கும், உடல் நலனுக்கும் தீங்கானது என்று சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் தொடங்கி, உலக சுகாதார நிறுவனம் வரை அனைவரும் அறிவுறுத்தி வரும் நிலையில், விஜய் புகைக்கும் காட்சியைப் பார்க்கும் சிறுவர்கள் புகை நல்லது என நினைத்து அப்பழக்கத்துக்கு அடிமையாகி விட மாட்டார்களா? இதுதான் தமது ரசிகர்களுக்கு நடிகர் விஜய் காட்டும் நல்வழியா? சர்ச்சையை ஏற்படுத்தி அதன் மூலம் விளம்பரம் தேடும் நோக்குடன் இவ்வாறு செய்யப்பட்டிருந்தால் அதை விட பெரிய இழிவு இல்லை.

தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்திற்கும் மிகப்பெரிய வில்லனாக உருவெடுத்திருப்பது புகைப் பழக்கம் தான். அண்மைக்கால புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 12 லட்சம் பேர் புகைப்பழக்கத்தால் உயிரிழக்கின்றனர். தமிழகத்தில் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகி இறப்போர் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் அதிகமாகும்.

திரையில் தோன்றும் தங்களின் நாயகர்கள் என்ன செய்கிறார்களோ, அதை அப்படியே கடைப் பிடிப்பது ரசிகர்களின் வாடிக்கையாகி விட்டது. மருத்துவ உலகின் புனித நூலாக போற்றப்படும் லான்செட் இதழ் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையில் புகைபிடிக்க தொடங்கும் இளம் வயதினரில் 52% பேர் திரைப்படங்களை பார்த்து புகைபிடிக்க கற்றுகொள்வதாகக் கூறியது.

பல்வேறு தீவிர முயற்சிகளின் விளைவாக புகையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், இப்போது சிகரெட் சாத்தானை தூக்கிப் பிடிக்கும் செயல்களில் நடிகர் விஜய் ஈடுபடக்கூடாது. திரைத்துறையினருக்கும் சமூகப் பொறுப்பு தேவை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களை நள்ளிரவில் சந்தித்து ஆறுதல் கூறி, நிதியுதவி வழங்கிய விஜய்யின் செயல் பாராட்டத்தக்கது.

அது தான் சமூகப் பொறுப்பு. அதேபோல், புற்றுநோய் மருத்துவமனைக்கு அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் சன் பிக்சர்சின் செயலும் சமூக அக்கறை தான். இந்த சமூக அக்கறைகள் உண்மையானவையாக இருந்தால் சர்கார் படத்தின் புகைக் காட்சியை நடிகர் விஜய்யும், சன் பிக்சர்சும் உடனே நீக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.