ramadoss criticizing admk activities

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நிலங்களின் வழிகாட்டி மதிப்பு கண் மூடித்தனமாக உயர்த்தப்பட்டதாகவும் தற்போது எடப்பாடி ஆட்சியில் குறைக்கபட்டுள்ளதாகவும் பா.மக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று கூடியது. இதில் நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பீடு 33 சதவீதமாக குறைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் மனைகளுக்கான வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தால் மக்களுக்கு சில நன்மைகள் கிடைக்கும் எனவும், அதேநேரத்தில் பதிவுக் கட்டணம் நான்கு விழுக்காடாக உயர்த்தப்பட்டிருப்பதால் நேர்மையாக சொத்து மதிப்பை காட்ட விரும்புபவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நிலங்களின் வழிகாட்டி மதிப்பு கண் மூடித்தனமாக உயர்த்தப்பட்டதாகவும், பகுதிவாரியாக நிலங்களை ஆய்வு செய்து அதற்கேற்ற வகையில் வழிகாட்டி மதிப்பை நிர்ணயிப்பது தான் சரியான அணுகுமுறை எனவும் குறிபிட்டுள்ளார்.

வழிகாட்டி மதிப்பை உயர்த்துவதில் ஜெயலலிதா எந்த தவறை செய்தாரோ, அதே தவறை இப்போதைய பினாமி எடப்பாடி அரசும் செய்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெயலலிதா ஆட்சியில் அனைத்து நிலங்களின் வழிகாட்டி மதிப்பும் எவ்வாறு கண்மூடித்தனமாக உயர்த்தப்பட்டதோ, அதேபோல் இப்போது அனைத்து நிலங்களின் மதிப்பும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் இது தவறு எனவும் தெரிவித்துள்ளார்.

நிலங்களில் தேவை, அமைவிடம், சந்தை மதிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தான் ஒவ்வொரு பகுதிக்குமான நில வழிகாட்டி மதிப்பை அரசு நிர்ணயித்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

வழிகாட்டி மதிப்பு குறைக்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டுவதற்காக பதிவுக் கட்டணம் நான்கு மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும், வழிகாட்டி மதிப்பு குறைக்கப்பட்டதால் ஏற்பட்ட பயனை பதிவுக் கட்டண உயர்வு அழித்து விடும் எனவும் குறிபிட்டுள்ளார்.

எனவே மத்திய அரசு அறிவுறுத்தியபடி தமிழகத்தில் முத்திரைக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணங்களை குறைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று ராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்த்தியுள்ளார்.