பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள தேசிய புலனாய்வு முகமையை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாகவும், அதை திமுக கண்டிப்பதாகவும்  ஸ்டாலின் கூறியிருக்கிறார். அரசியலில் அப்பட்டமாக இரட்டை வேடம் போடுவதற்கு எடுத்துக்காட்டு இது தான் என்று கூறும் அளவுக்கு தான் ஸ்டாலினின் கருத்து அமைந்திருக்கிறது என ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தேசிய புலனாய்வு முகமை: இஸ்லாமியர் நலனும், திமுகவின் இரட்டை வேடமும்! என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ள அவர்; பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்கள் என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட அனைத்துச் சட்டங்களும், அவற்றின் மூலம் அமைக்கப்பட்ட அமைப்புகளும் பல தருணங்களில் தவறாக பயன்படுத்தப்படுள்ளன என்பதையும், அரசியல் பழிவாங்கும் ஆயுதங்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் எவரும் மறுக்க முடியாது. ஆனால், அத்தகைய சட்டங்களும், அமைப்புகளும் உருவாக்கப்படுவதற்கும், அதில் திருத்தங்கள் செய்யப்படுவதற்கும் காரணமாக இருந்தவர்களே, அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு தங்கள் நிறத்தை மாற்றிக் கொண்டு நீலிக்கண்ணீர் வடிப்பது தான் சந்தர்ப்பவாத அரசியலின் சிகரம் ஆகும்.

‘‘தமிழகத்தில் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு என்று தனியாக ஒரு பிரிவு டி.ஜி.பி. அலுவலகத்தில் இருக்கிறது. அதற்கு  தலைமையில் ஒரு தனி அதிகாரியும் இருக்கிறார். துணை பிரிவுகளும் இருக்கின்றன. ‘க்யூ பிராஞ்ச்’ என்று சொல்லப்படுகின்ற அந்தப் பிரிவு மாநில அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இயங்கி வருவது மட்டுமின்றி - மாண்புமிகு முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. ஆனால் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தத் துறையையும் மீறி- தேசியப் புலனாய்வு முகமையை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் மத்திய அரசு அனுப்பி அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை குறிவைத்து நடவடிக்கை எடுக்கிறது என்று  ஸ்டாலின் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

மதத்தின் அடிப்படையில் ஒருவரின் செயல்களை தீர்மானிக்கக்கூடாது; தவறு செய்யாத அப்பாவிகள் யாரும் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக தண்டிக்கப்படக்கூடாது; அதேநேரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க அனுமதிக்கக்கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். ஆனால், தமிழ்நாட்டுக்குள் தேசிய புலனாய்வு முகமை நுழைவதற்கு தடம் அமைத்துக் கொடுத்தது யார்? திமுக தானே... அதை மு.க.ஸ்டாலின் அவர்களால் மறுக்க முடியுமா?

தேசிய புலனாய்வு முகமை 2009-ஆம் ஆண்டில் தான் அமைக்கப்பட்டது. அதற்காக 2008-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று விசாரணை நடத்தும் அதிகாரம் அந்த அமைப்புக்கு வழங்கப்பட்டது. அந்த சட்டத்தை இயற்றிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் திமுகவும் அங்கம் வகித்தது. தேசிய புலனாய்வு முகமை சட்டத்தை திமுக முழுமையாக ஆதரித்தது. அதுமட்டுமின்றி, அப்போது தமிழகத்தில் திமுக ஆட்சி தான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மு.க.ஸ்டாலின் தான் துணை முதலமைச்சராக இருந்தார். அவரது தந்தை கலைஞர் தான் முதலமைச்சராக இருந்தார். இப்போது மு.க.ஸ்டாலின் கூறும் ‘‘க்யூ’’ பிரிவு காவல்துறை, அப்போது கலைஞர் அவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. ஆனால், ‘‘க்யூ’’ பிரிவு காவல்துறையை மீறி தேசிய புலனாய்வு முகமை தமிழகத்திற்குள்ளும் நுழைந்து விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது குறித்து அப்போது யாரும் வாயைத் திறக்கவில்லை. இப்போது தான் திமுகவுக்கு இதில் ஞானம் பிறந்திருக்கிறது போலும்.

அதுமட்டுமன்றி, கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தேசிய புலனாய்வு முகமை சட்டத்தில் நான்கு திருத்தங்களை செய்வதற்காக சட்ட முன்வடிவு நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அப்போது அந்த சட்டத்திருத்தங்களை திமுக முழுமையாக ஆதரித்தது. அத்துடன் நிற்காமல் தேசிய புலனாய்வு முகமை சட்டத்திருத்தத்தை ஆதரித்து வாக்களித்தது ஏன்? என்பது குறித்து அக்கட்சியின் நாடாளுமன்ற கொறடா மூலம் விளக்கமளித்த திமுக, தேசிய புலனாய்வு முகமை சட்டத்தில் கொண்டு வரப்பட்ட நான்கு திருத்தங்கள் அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை பறிக்கும் விதத்தில் எந்த புது அதிகாரத்தையும் காவல்துறைக்கு வழங்கிடவில்லை என்பதோடு, வலைதளங்களில் பரப்பப்படுவதுபோல புதிய எந்த பிரிவுகளையும் கூடுதலாக சேர்க்கவும் இல்லை’’ என்று கூறி வக்காலத்து வாங்கியது. திமுகவின் இந்த நிலைப்பாடு கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

அதற்கெல்லாம் மேலாக,‘‘ஏதோ இந்த சட்டம் புதிதாக இப்போதுதான் கொண்டு வரப்படுவது போலவும், மாநில உரிமைகள் பறிக்கப்படுவது போலவும், சிறுபான்மையினருக்கு எதிராக மனித உரிமைகளை மறுக்கும் புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது போலவும், கொடூரமான வரம்பற்ற அதிகாரங்கள் காவல் அதிகாரிகளுக்கு புதிதாக அளிக்கப்பட்டுள்ளது போலவும், இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் வேண்டுமென்றே திரித்து செய்திகளை பரப்புவதை வன்மையாக கண்டிக்கிறேன்’’ என்றும் திமுக கூறியிருந்தது. தேசிய புலனாய்வு முகமை சட்டத்திருத்தத்துக்கு ஆளுங்கட்சியை விட தீவிரமாக வக்காலத்து வாங்கிய திமுக, இப்போது அதை எதிர்ப்பது போல நாடகமாடுவது பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடும் செயலுக்கு ஒப்பானதாகும். வேலூர் தொகுதி இடைத்தேர்தலில் இஸ்லாமியர்களின் வாக்குகள் பறிபோய்விடுமே? என்ற பதட்டம் தான் இதற்கெல்லாம் காரணமாகும்.

திமுகவின் இயல்பே இரட்டை வேடம் தான் என்பது தமிழக அரசியலின் அரிச்சுவடி அறிந்தவர்களுக்கு புரியும். தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் போது மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளித்து விட்டு, ஆட்சியை இழந்தவுடன் அதை கடுமையாக எதிர்ப்பது, மத்தியில் ஆட்சியில் இருக்கும் போது நீட் தேர்வு கொண்டு வருவதற்கு ஆதரவு தெரிவித்து விட்டு, ஆட்சியை இழந்த பின் அதை கடுமையாக எதிர்ப்பது போன்றவை திமுகவின் அரசியல் பித்தலாட்டங்கள். மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி விட்டதால், எப்போதுமே அவர்களை ஏமாற்றி விடலாம் என்று நினைக்கும் திமுகவுக்கு இனி வரும் தேர்தல்களில் மக்கள் சரியான பாடம் புகட்டப்போவது உறுதி எனக் கூறியுள்ளார்.