Ramadoss commented on TN CM
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூற முதலமைச்சர் செல்வதாக வந்த செய்திக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் கிண்டல் செய்து டுவிட்டரில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் 100-வது நாளன்று போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. போலீசார் நடத்திய துப்பாக்கிசூடு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை முதலமைச்சர் சந்திக்கவில்லை என்று புகார் எழுந்தது.
அதற்கு விளக்கமளித்த முதலமைச்சர், 144 தடை உத்தரவு காரணமாகத்தான் அங்கு செல்லவில்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில், வரும் 9 ஆம் தேதி அன்று துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தூத்துக்குடி பயணம் குறித்து, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில் கிண்டல் செய்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற, நாளை மறுநாள் தூத்துக்குடி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி: செய்தி - பாதிக்கப்பட்ட மக்களை ஏதேனும் ஓர் அரங்கத்தின் மூலையில் அடைத்து வைத்து விட்டு, கால் கி.மீ தொலைவில் இன்னொரு மூலையில் இருந்து ஆறுதல் கூறுவார் என நம்புவோம்! என்றும் அடேங்கப்பா... என்னவொரு வேகம். பிள்ளையைக் கிள்ளிவிட்டு 19 நாள்கள் கழித்து தொட்டிலை ஆட்டச் செல்கிறார்! எனவும் டாக்டர் ராமதாஸ் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.
