இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் வாழும் மாநிலமாகவும், தமிழ்ப் பள்ளிகள் அதிகமுள்ள மாநிலமாகவும் கர்நாடகம் திகழ்ந்து வந்தது. ஆனால், கட்டாயக் கன்னடக் கல்விக் கொள்கை குறித்த தவறான புரிதல் காரணமாக அங்குள்ள தமிழ்ப் பள்ளிகள் மூடப்பட்டு வருவது வருத்தம் அளிக்கிறது என கூறியுள்ளார் ராமதாஸ்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு, கோலார், சாம்ராஜ்நகர், மாண்டியா, மைசூர், சிவமொக்கா, தும்கூர், தாவண்கெரெ, மங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகும் அந்தப் பகுதிகளில் தமிழர்களின் குழந்தைகள் படிப்பதற்காக தமிழ்ப்பள்ளிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தன. அப்பள்ளிகளில் தமிழ் ஒரு பாடமாக நடத்தப்பட்டது மட்டுமின்றி, அனைத்துப் பாடங்களும் தமிழ் மொழியில் கற்பிக்கப்பட்டன.

இந்தியாவில் 1956&ஆம் ஆண்டில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போதும் கர்நாடகத்தின் அங்கமாகவே நீடித்த அந்த பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் செயல்பட்டு வந்தன. அவற்றில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் குழந்தைகள் பயின்று வந்தனர். ஆனால், இப்போது நூற்றுக்கும் குறைவான தமிழ்ப் பள்ளிகள் மட்டும் தான் இயங்கி வருகின்றன. அதுமட்டுமின்றி அந்த பள்ளிகளில் தமிழ் மொழியும், தமிழ்வழிக் கல்வியும் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. கடந்த ஆண்டு அந்தப் பள்ளிகள் மூலம் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 122 ஆக குறைந்து விட்டது. அதுமட்டுமின்றி ஒட்டுமொத்தமாக இந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து விட்டது.

கர்நாடகத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் வழியிலும், தமிழ் மொழியையும் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததற்கு காரணம் கர்நாடகத்தில் கன்னடம் படித்தவர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படும் என்று தவறாக செய்யப்பட்ட பிரச்சாரம் தான். இந்த பிரச்சாரத்தை நம்பி தமிழர் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள், தமிழ் மொழியை படிப்பதை கைவிட்டு கன்னடம், ஆங்கிலம், இந்தி ஆகிய மும்மொழிகளை படிக்கத் தொடங்கியுள்ளனர். இம்மூன்று மொழிகளை மட்டுமே பயில வேண்டும் என்று எந்த நிபந்தனையும் இல்லாத சூழலில், தவறான நம்பிக்கை காரணமாக பெரும்பாலான தமிழர் குழந்தைகள் தமிழ் படிப்பதை கைவிட்டு விட்டனர். இதையே காரணம் காட்டி அரசு சார்பில் நடத்தப்பட்டு வந்த ஏராளமான தமிழ் பள்ளிகள் படிப்படியாக மூடப்பட்டு விட்டன. இதனால் தமிழிலும், தமிழ் மொழியையும் படிக்க விரும்பும் குழந்தைகளுக்குக் கூட அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.

இதே நிலை நீடித்தால் கர்நாடகத்தில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தாய்மொழி தெரியாமல் வாழும் அவலநிலை ஏற்பட்டு விடும். இத்தகைய நிலை ஏற்படுவதை தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. கர்நாடகத்தில் உள்ள தமிழ்க் குழந்தைகள் தமிழ் படிப்பதற்கு வசதியாக கர்நாடகத்திலுள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு தேவையான தமிழ்ப் பாடப் புத்தகங்கள் மற்றும் தமிழாசிரியர்களை அனுப்பி வைத்தல், கர்நாடகத்திலுள்ள தமிழ்ப் பள்ளிகளில் படித்து 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் கல்வி உதவித் தொகை வழங்குதல், தமிழ் மொழியில் பட்டப்படிப்பு முதல் முனைவர் பட்ட ஆய்வு வரை தமிழக அரசு பல்கலைக்கழகங்களில் இலவசமாகவும், கல்வி உதவித் தொகையுடனும் படிக்க வகை செய்தல், தமிழ்ப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், தமிழ்க் கல்வியை விரிவாக்கவும் தனி வாரியம் ஒன்றை அமைத்து அதற்கு தாராளமாக நிதி உதவி அளித்தல் ஆகியவற்றின் மூலம் கர்நாடகத்தில் தமிழர்கள் குடும்பத்து குழந்தைகள் தடையின்றி தமிழ் வழியிலும், தமிழ் மொழியையும் கற்க முடியும்.

உலக அளவில் தமிழ் வளர்ச்சிக்காக தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. அமெரிக்காவில் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக தமிழக அரசு ரூ.10 கோடி வழங்கியது. உலகம் முழுவதும் 30 பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை அமைக்க தமிழக அரசு உதவியுள்ளது. லண்டன், யாழ்ப்பாணம், மலேஷியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 5 பல்கலைக் கழகங்களில் நடப்பாண்டில் தமிழ் இருக்கை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

உலக அளவில் தமிழ்க் கல்வி & ஆராய்ச்சிக்கு உதவுவதைப் போலவே உள்நாட்டில் பிற மாநிலங்களிலும் தமிழ்க் கல்விக்கு அரசு உதவ வேண்டும். அதன்படி கர்நாடகத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் தமிழ்க் குழந்தைகள் தமிழ் கற்பதற்கான அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் எனக் கூறியுள்ளார்.