3 ராஜ்யசபா எம்பி பதவிகள் திமுகவிற்கு கிடைக்க உள்ள நிலையில் இரண்டு பேர் பெயர்களை ஸ்டாலின் இறுதி செய்துவிட்டதாகவும் 3வது நபரை தேர்வு செய்வதற்கான லாபி தீவிரம் அடைந்துள்ளது.

திருச்சி சிவாவின் பதவிக் காலம் முடிவடைய உள்ளது. தற்போதைக்கு நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுகவின் குரலாக இருக்க கூடியது சிவாவின் பேச்சுகள் மட்டும் தான். கனிமொழியும் மக்களவை எம்பியாகிவிட்டார். இதனால் பேச்சுத் திறமை வாய்ந்த நபர் ஒருவர் திமுகவிற்கு ராஜ்யசபாவில் தேவை. மேலும் ராஜ்யசபா செயல்பாடுகள், விதிகள் தெரிந்த ஒருவரும் திமுகவிற்கு அவசியம் . எனவே திருச்சி சிவாவை மீண்டும் ராஜ்யசபா எம்பி ஆக்குவதை தவிர தற்போதைக்கு திமுகவிற்கு வேறு வாய்ப்பு இல்லை.

மேலும் திருச்சி சிவா திமுக தலைவர் ஸ்டாலினுடன் நெருக்கமாக இருக்க கூடியவர். சசிகலா புஷ்பா சர்ச்சையை தவிர அவர் மீது வேறு எந்த சர்ச்சையும் இருந்தது இல்லை. மேலும் தமிழகம் முழுவதும் திமுக பொதுக்கூட்டங்களுக்கு சலைக்காமல் செல்லக்கூடியவர். இந்த காரணங்களால் அவருக்கு மீண்டும் எம்பி பதவியை கொடுக்க வேண்டும் என்பதில் ஸ்டாலின் உறுதியுடன் உள்ளார். இதே போல் திமுகவின் ராஜ்யசபா எம்பி சீட், வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவுக்கும் உறுதியாகியுள்ளது. இளங்கோ திமுகவின் சீனியர் வழக்கறிஞர்களில் ஒருவர்.

தற்போது திமுகவிற்காக அதிக வழக்குகளில் ஆஜராகி வரும் வில்சனை காட்டிலும் அதிக வழக்குகளில் ஒரு காலத்தில் திமுகவிற்காக களம் இறங்கியவர். கடந்த முறை கூட என்.ஆர் இளங்கோ பெயர் ராஜ்யசபா எம்பி பதவிக்கான பரிசீலனையில் இருந்தது. ஆனால் கலைஞர் அடக்கம் செய்யப்பட மெரினாவில் இடம் பிடித்து கொடுத்தார் என்கிற லாஜிக்கில் வில்சனுக்கு அந்த எம்பி பதவி போனது. இருந்தாலும் கூட மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் வேட்பு மனு நிராகரிக்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில் அவருக்கு மாற்றாக என்.ஆர். இளங்கோ வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அந்த வகையில் தற்போதைய கோட்டாவில் என்.ஆர்.இளங்கோவிற்கு ராஜ்யசபா பதவியை கொடுக்க ஸ்டாலின் முடிவெடுத்துவிட்டதாக சொல்கிறார்கள். மேலும் ஒரு பதவி உள்ள நிலையில் அதனை தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று இடதுசாரிகள் தரப்பில் இருந்து அறிவாலயத்தை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை என்று திமுக தரப்பு கதவை சாத்திவிட்டது. இந்த நிலையில் சிறுபான்மையினர் அல்லது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் என இரண்டுவிதமான ஆலோசனை அறிவாலயத்தில் நடந்து வருவதாக சொல்கிறார்கள்.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்றால் திமுக துணை பொதுச் செயலாளராக உள்ள விபி துரைசாமி ரேசில் உள்ளார். இதே போல் சிறுபான்மை சமுதயாத்தை சேர்ந்தவர் என்றால் தற்போது திமுக இளைஞர் அணி துணைச் செயலாளராக உள்ள அசன் முகமது ஜின்னா மற்றும் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளராக இருக்கும் பாஷா ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன. இதில் அசன் முகமது ஜின்னா ஒரு காலத்தில் ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருந்தவர். தற்போது உதயநிதிக்கு வலதுகரமாக செயல்பட்டு வருகிறார்.

அதே சமயம் பாஷா, ஸ்டாலின் மருமகன் சபரீசனின் மனதை கொள்ளை கொண்டவர். எனவே திமுக சார்பில் ராஜ்யசபாவிற்கு செல்வது விபி துரைசாமியா, அசன் முகமது ஜின்னாவா அல்லது பாஷாவா என்று அறிவாலயத்தில் பட்டிமன்றமே நடைபெற்று வருகிறது.