மறைந்த முதல்வர் கருணாநிதி சமாதியை மெரினாவில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றுத் தந்த வழக்கறிஞர் வில்சனுக்கு மரியாதை செய்யும் வகையில் அவருக்கு மாநிலங்களவை எம்.பி. பதவியை வழங்கி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி காட்டியுள்ளார். 

தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகிற ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் திமுக சார்பில் 3 பேரும், அதிமுக சார்பில் 3 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக இன்று முதல் ஜூலை 8-ம் தேதி வரை வேட்பு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், திமுகவைப் பொறுத்தவரை கூட்டணி உடன்படிக்கையின்படி, மதிமுகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்கியுள்ளது. மீதமுள்ள 2 சீட்கள் யாருக்கு வழங்குவது என்பதில் போட்டி நிலவி வந்தது. இந்நிலையில், திமுக சார்பில் ராஜ்யசபா எம்.பி சீட்டிற்கு போட்டியிட உள்ள விவரங்களை மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதன்படி, முன்னாள் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.வில்சன் (53), திமுகவின் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் எம்.சண்முகம் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

இவர்களில் மூத்த வழக்கறிஞராக இருக்கும் வில்சன், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நன்மதிப்பை பெற்றவர். பல்வேறு வழக்குகளில் திமுகவிற்கு மாபெரும் வெற்றியை தேடி தந்தவர். இதன் காரணமாக வில்சனை, “வின்”சன் என்று கருணாநிதியால் அன்போடு அழைக்கப்படுவார். கடைசியாக கருணாநிதி மறைந்த பிறகு, அவரது உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க அரசு மறுத்துவிட்டது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கில் வாதாடிய விலசன் 5 முறை தமிழ்நாட்டின் முதல்வராகவும், தமிழினத்தின் தலைவராகவும் இருந்த கருணாநிதிக்கு இடம் வழங்க வேண்டும் என்றார். மேலும் தனது ஆசான் அறிஞர் அண்ணாவின் கல்லறைக்கு அருகே இடம் ஒதுக்க வேண்டும் என்றும் கடுமையான வாதத்தை முன்வைத்து திமுக மாபெரும் வெற்றியை பெற்று தந்தார். 

அப்போதே வில்சனுக்கு ஏதாவது பெரிய பரிசு ஒன்றை கொடுக்க வேண்டும் என்று கடந்த ஓராண்டாகவே மு.க.ஸ்டாலின் நினைத்து வந்தார். இந்நிலையில் இவருக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி கொடுத்து மு.க.ஸ்டாலின் கவுரவித்துள்ளார்.