ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் 3-வதாக வேட்பாளர் ஒருவர் மனு தாக்கல் செய்த தகவலை அறிந்து வைகோ ஒரு நிமிடம் ஆடிப்போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் மதிமுகவிற்கு வைகோ 3 இடங்களை கோரி வந்தார். ஆனால் ஒரே ஒரு இடம் என்பதில் திமுக உறுதியாக இருந்தது. ஆனால் 3 தொகுதிகளை கொடுக்கவில்லை என்றால் கூட்டணி வாய்ப்பில்லை என்கிற ரீதியில் வைகோ அப்போது பேசினார். ஆனால் இந்த முறையும் வைகோவை கழட்டிவிட்டால் திமுக மீது நெகடிவ் விமர்சனம் வரும் என்று 2 தொகுதிகளுக்கு இறங்கி வந்தார் ஸ்டாலின். 

அப்படி என்றால் ஒரு ராஜ்யசபா எம்பி பதவி ஒரே ஒரு மக்களவை தொகுதி கொடுங்கள் என்று பேரத்தை வேறு திசைக்கு திருப்பினார் வைகோ. இதனை ஏற்று மக்களவை தேர்தலில் ஈரோடு தொகுதியும் மாநிலங்களவை தேர்தலில் மதிமுகவிற்கு ஒரு தொகுதியும் என்று உடன்பாடு கையெழுத்தானது. உடன்பாட்டை மதித்து மதிமுகவிற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டு திமுக அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. 

இதனை அடுத்து வைகோவை திமுக எம்எல்ஏக்கள் முன்மொழிந்தும் வழிமொழிந்தும் மாநிலங்களவை தேர்தலில் வேட்பாளராக நிறுத்தினர். இந்த நிலையில் தான் தேச துரோக வழக்கில் வைகோ குற்றவாளி என்று தீர்ப்பு வெளியானது. ஓராண்டு சிறை தண்டனை கிடைத்தாலும் வைகோ தண்டனை பெற்று இருப்பது தேச துரோக வழக்கு. எனவே அவர் தேர்தலில் போட்டியிட முடியுமா? என்கிற குழப்பம் நிலவுகிறது. 

ஏனென்றால் இந்தியாவில் தேசத்துரோக வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஒரே நபர் வைகோ தான். சுதந்திர இந்திய வரலாற்றில் இந்த சட்டப்பிரிவின் கீழ் யாரும் இதுவரை தண்டிக்கப்பட்டது இல்லை. எனவே இதற்கு முன்பு தேர்தலில் தேசதுரோக வழக்கில் தண்டனை பெற்றவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த வரலாறு இல்லை. எனவே இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவு தான் இறுதியானது. 

தேச துரோக வழக்கில் தண்டனை பெற்ற ஒருவரை எப்படி நாடாளுமன்றத்திற்கு சட்டம் இயற்ற அனுமதிக்க முடியும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதனால் வைகோவின் வேட்பு மனு ஏற்கப்படுமா? நிராகரிக்கப்படுமா? என்கிற குழப்பம் நீடிக்கிறது. வைகோவே கூட பரிசீலனையின் போது தான் விடை கிடைக்கும் என்று கூறி வருகிறார். இதற்கிடையே இப்படிப்பட்ட சூழலில் தனக்கு மாற்று வேட்பாளராக மதிமுகவை சேர்ந்த ஒருவரை முன்மொழிய வேண்டும் என்று ஸ்டாலினை சந்தித்து வைகோ பேசினார். 

தன்னுடைய வேட்பு மனு நிராகரிக்கப்படும் பட்சத்தில் மதிமுக சார்பில் அவர் மாநிலங்களவை செல்வார் என்றும் ஸ்டாலினிடம் வைகோ கூறியதாக சொல்கிறார்கள். இது குறித்து யோசிப்பதாக கூறிய ஸ்டாலின் திடீரென திமுக சார்பில் என்.ஆர்.இளங்கோ எனும் வழக்கறிஞரை 3-வது திமுக வேட்பாளராக களம் இறக்கியுள்ளார். அவரும் உடனடியாக தலைமைச் செயலகம் சென்று வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டார். இந்த தகவல் அறிந்து வைகோ அதிர்ந்துவிட்டார். உடனடியாக திமுக தலைமையை வைகோ தொடர்பு கொள்ள, மாநிலங்களவை தேர்தலில் மதிமுக வேட்பாளர் ஒருவரை ஆதரிப்பதாக வாக்குறுதி அளித்தோம். அதன்படி உங்களுக்கு எங்கள் எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்து வேட்பாளராக்கிவிட்டோம், வேட்பு மனு தள்ளுபடியானால் அது தங்கள் பிரச்சனை இல்லை என்று கூறி கை விரித்துள்ளது. 

இதனால் செய்வதறியாது திகைத்த வைகோ வேறு வழியே இல்லாமல் தான் கூறியதால் தான் திமுக மாற்று வேட்பாளரை அறிவித்ததாக கூறி சமாளித்து வருகிறார். உண்மையில் வைகோ கூறித்தான் இப்படி ஒரு முடிவை திமுக எடுத்தது என்றால் அதனை ஒரு அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்தாமல் திமுக ஏன் இப்படி அவசர அவசரமான இளங்கோவை வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்கிற கேள்வி எழுந்தது. 

வைகோ இப்போது தண்டனை பெற்றுள்ள தேசதுரோக வழக்கு திமுக ஆட்சியில் தொடரப்பட்டதாகும். அந்த வகையில் அவர் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கு காரணமும் திமுக தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. மதிமுகவிற்கு எம்பி பதவி என்று கிட்டத்தட்ட ஸ்டாலின் ஆசை காட்டி மோசம் செய்துவிட்டதாகவே வைகோ தரப்பு தற்போது கருதுகிறது.