இந்தியா பலவீனமான நாடு அல்ல. எங்கள்  நிலத்தில் ஒரு அங்குலத்தை கூட எந்த சக்தியாலும் கைப்பற்ற முடியாது என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். லடாக் மற்றும் காஷ்மீர் ஆகிய பகுதிகளுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், இந்திய ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய போது இவ்வாறு கூறியுள்ளார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் 15ஆம் தேதி இந்திய எல்லைக்குள் அத்துமீறி சீன ராணுவத்தினர் நடத்திய வன்முறை தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். இதையடுத்து இரு நாட்டுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இருநாடுகளும் எல்லையில் படைகளைக் குவித்தது. இதனால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற சூழல் ஏற்பட்டது. இதற்கிடையில் இருநாட்டு ராணுவ தளபதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில்,   அதில் இரு நாடுகளும் எல்லையில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வது என முடிவு செய்யப்பட்டு அதை நடைமுறைப்படுத்த இருநாடுகளும் முன்வந்துள்ளன. 

சர்ச்சைக்குரிய பாங்கொங் த்சோ ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு பகுதி உள்ளிட்ட இடங்களில் இருந்து இருநாடுகளும் படைகளை பின்வாங்கியுள்ளன. இதற்கிடையில் கடந்த ஜூன்-3 ஆம் தேதி, இந்திய பிரதமர் மோடி லேவுக்கு பயணம் மேற்கொண்டதுடன், அங்கு ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது ஆக்கிரமிப்புகளின் சகாப்தம் முடிந்துவிட்டது, இது வளர்ச்சிக்கான நேரம் என சீனாவை எச்சரித்ததுடன், இந்தியா எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக உள்ளது என திட்டவட்டமாக அறிவித்தார். மோடியின் பேச்சு சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.  சீனாவுக்கு வலுவான எச்சரிக்கையாகவும் அமைந்தது.  இந்நிலையில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை ராணுவ விமானம் மூலம்  லடாக்கில் உள்ள லே பகுதிக்கு சென்றடைந்தார். அவருடன் இந்திய பாதுகாப்பு படை தளபதி ஜெனரல் பிபின் ராவத், இந்திய இராணுவத்தளபதி எம்.எம் நரவானே ஆகியோரும் உடன் சென்றனர். பின்னர் கிழக்கு லடாக்கில் லே பகுதிக்கு மேலே இருக்கும் ஸ்டக்னா, லுகுங் பகுதிகளை ராஜ்நாத் சிங்  ஆய்வு செய்தார். 

இரண்டு நாள் பயணத்தின் முதல் நாளான இன்று இந்திய சீன  எல்லையை ஒட்டியுள்ள லடாக் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பார்வையிட்டார், அங்கு ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளை அதாவது சீனாவுக்கு மிக நெருக்கமாக பகுதியில் பாரா கமாண்டோக்களின் வீரதீர செயல்களை ராஜ்நாத் சிங் நேரில் கண்டு பாராட்டினார். பின்னர் பாதுகாப்பு படை வீரர்களுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர்,  இந்தியா-சீனா இடையே எல்லையில் சர்ச்சையை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் எந்த அளவிற்கு அதை தீர்க்க முடியும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. ஆனால்  நான் உங்களுக்கு ஒன்றை உறுதியளிக்கிறேன். இந்திய நிலத்தின் ஒரு அங்குலத்தை கூட உலகின் எந்த ஒரு சக்தியாலும் எடுக்க முடியாது. பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண முடிந்தால் அதை விட சிறந்தது எதுவுமில்லை என்றார். இதற்கிடையில் ராஜ்நாத் சிங் தனது பயணத்தில் இரண்டாவது கட்டமாக ஸ்ரீநகர் விரைந்துள்ளார். அங்கு எல்லையில் உள்ள நிலைமைகளை அவர் ஆய்வு செய்ய உள்ளார்.  மேலும் ஜம்மு காஷ்மீரில் உள்ள பதற்றமான பகுதிகளையும் அவர் பார்வையிடுவார் என பாதுகாப்பு அமைச்சக அலுவலகம் தெரிவித்துள்ளது.