தமிழ்நாட்டிலிருந்து திராவிடத்தை அழிக்க வேண்டும் என்று அமித்ஷாவும், மோடியும் எடுத்த விபரீத முயற்சிகள் தென்னிந்தியா முழுக்க திராவிட சிந்தனையை பற்றி எரிய வைத்திருக்கிறது!...என்கிறார்கள் பொலிடிகல் பார்வையாளர்கள்.

தெலுங்கு நடிகரான சிவாஜி ‘திராவிட நாட்டை அடிமைப்படுத்த நாலாயிரத்து எண்ணூறு கோடியில் ‘ஆபரேஷன் திராவிடம்’ எனும் பிராஜெக்டை கையில் எடுத்துள்ளது ஒரு தேசிய கட்சி’ என்று பி.ஜே.பி.க்கு எதிரான ஒரு புது குண்டை வீசினார். அது செல் செல்லாக வெடித்து தென்னிந்தியா முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து விரிவாகப் பேசியிருக்கும் சிவாஜி “ஒரு தேசிய கட்சி 2019- நாடாளுமன்ற தேர்தலின் மூலம் தென்னிந்தியா முழுக்க கால் ஊன்ற  தயாராகி வருகிறது. இதற்காக பல ஸ்லீப்பர் செல்களைக் கொண்ட தனி விங்கை நிறுவியிருக்கிறது.

இதற்காக தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு ‘ஆபரேஷன் ராவணா’ என்றும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கு ‘ஆபரேஷன் கருடா’ என்றும் பெயர் வைத்துள்ளது. இந்த ப்ராஜெக்டுக்காக நாலாயிரத்து எண்ணூறு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. கர்நாடகத்துக்கு ‘ஆபரேஷன் குமார்’ என பெயரிட்டுள்ளனர் என தெரிகிறது.

ஆந்திராவில் ‘ஆபரேஷன் கருடா’ திட்டத்தின்படி ஒரு பிரபல நடிகரை களமிறக்க போகிறார்கள். அந்த நடிகர் இரு மாநில அரசுகளின் மெத்தனம், ஊழல், உபயோகமற்ற திட்டங்களை கடுமையாய் விமர்சித்து மக்கள் மனதில் இடம் பிடிப்பார், பிளவுகளை உருவாக்குவார். தங்களை காக்க வந்த கடவுள் போல் அந்த நடிகரை மக்கள் நம்ப துவங்குவர். அவரை வைத்தே டெல்லி லாபி அந்த மாநிலங்களில் கால் ஊன்றும்.

இதே கதைதான்  தமிழகத்தில் நடக்க இருக்கிறது. மொத்தத்தில் தென் இந்தியாவை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்கிறார்கள்.” என்று சொல்லியுள்ளார்.

அவரிடம், தமிழத்தில் செயல்படுத்தப்பட இருக்கும் ‘ஆபரேஷன் ராவணா’ ப்ராஜெக்டில் கமல் மற்றும் ரஜினி இருக்கிறார்களா? என்று கேட்கப்பட்டதற்கு “ஒன்று மட்டும் நிச்சயம். அந்த ப்ராஜெக்டில் கமல் இல்லை.” என்று சொல்லியுள்ளார். அப்படியனால் ரஜினி இருக்கிறார் என்பதை அவர் தெளிவுபடுத்திவிட்டார்! என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

தனது அரசியலின் பின்னணியில் பி.ஜே.பி. இல்லை! என்று ரஜினி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் ‘ஆபரேஷன்’ வார்த்தை மூலம் தென்னிந்தியாவை கலக்கியிருக்கும் சிவாஜி, பி.ஜே.பி.யின் ஆபரேஷனில் ரஜினி இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியிருப்பது தமிழத்தில் ரஜினிக்கு எதிரான லாபியை மேலும் கொம்பு சீவிவிட்டிருக்கிறது.