தனக்கு கமல் எதிரி இல்லையென்றும், ஏழ்மை, வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகளின் கண்ணீர் ஆகியவை தான் பிரதான எதிரி என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் இருதுருவங்களாக திகழ்ந்த ரஜினியும் கமலும் அரசியலிலும் இருதுருவங்களாக செயல்பட உள்ளனர். மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் கமல். அரசியல் கட்சி தொடங்க இருக்கிறார் ரஜினி.

இந்நிலையில், ரஜினியின் ஆன்மீக அரசியல் தொடர்பாக கருத்து தெரிவித்த கமல், ஆன்மீக அரசியல் செய்தால் ரஜினியை எதிர்ப்பேன் என தெரிவித்தார்.

மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திரைத்துறையினர் நடத்திய போராட்டத்தில் கலந்துகொள்ள புறப்படும் முன் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்திடம் கமலின் கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், கமலுக்கு நான் எதிரியில்லை. ஏழ்மை, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகளின் கண்ணீர், மீனவர்களின் கண்ணீர், இலங்கை தமிழ் அகதிகளின் அவல நிலை ஆகியவை தான் எனது எதிரி என ரஜினி பதிலளித்தார்.