கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கிய ரஜினி சூப்பர் ஸ்டாராவோம் உள கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. 

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் திரைத்துறைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆனதை ஒட்டி சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவார் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.

அவரது ஆட்சி நான்கைந்து மாதங்களில் கவிழ்ந்து விடும் என்று 99 சதவிகிதம் பேர் பேசினார்கள். ஆனால் அதிசயம் நடந்தது. அவரது ஆட்சி நீடித்தது. இது மாதிரியான அதிசயம் நேற்றும் நடந்தது. இன்றும் நடக்கிறது. நாளையும் நடக்கும். தமிழக அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும். நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு அதிமுக அமைச்சர்கள் பலரும் பதிலளித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா ரஜினிகாந்திற்கு பதிலடி கொடுத்துள்ளது. "தமிழகத்தில் நிறைய ரீல் தலைவர்கள் இருக்கிறார்கள். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வர ரீல் தலைவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அப்படி கிடையாது. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் முதல்வர் பழனிசாமி ரியல் தலைவராக இருக்கிறார். சினிமாவில் வாய்ப்பு இல்லை என்றால், ஒரே ஒரு சினிமாவில் நடித்து புகழ் கிடைத்தால் கூட ரீல் தலைவர்கள் அரசியலுக்கு வர நினைக்கிறார்கள். முதல்வராக ஆசைப்படுகிறார்கள். ஆனால் அதெல்லாம் நடக்காது.

முதல்வர் பழனிசாமி கஷ்டப்பட்டு முன்னேறியவர். ஒரு தொண்டன் தலைவன் ஆக முடியும். தமிழ் உலகை ஆள முடியும் என்று நிரூபித்தவர். அவர் மக்களுக்கு சேவை செய்து முன்னேறியவர். ரஜினி நடத்துனராக பணியை தொடங்கினார். அவரும் கூட தான் ஒரு சூப்பர் ஸ்டார் ஆவோம் என்று கனவில் நினைத்திருக்க மாட்டார். காலம் கொடுக்கும் வாய்ப்பை பயன்படுத்தி உழைப்பவர்கள் முன்னேறுவார்கள். அப்படித்தான் முதல்வர் பழனிசாமியும் முன்னேறினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.