Rajinikanth press meet at Poes garden

ஐபிஎல் போராடடத்தின்போது சீருடை அணிந்த காவலர்களை தாக்கியது குற்றம் என்று நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் தற்போது மீண்டும் அதே கருத்தை தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக் கூடாது என கடந்த 10 ஆம் தேதி சேப்பாக்கத்தில் நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக்கட்சி போன்ற கட்சிகளுடன் இணைந்து இயக்குநர்கள் பாரதிராஜா,அமீர், வெற்றிமாறன், கவுதமன் மற்றும் கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சில இளைஞர்கள் போலீசாரைத் தாக்கினர். இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், சீருடை அணிந்த போலீசாரை தாக்கியது பெரிய குற்றம் என்றும், இத்தகைய வன்முறையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

ரஜினியில் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். போலீசார் பொது மக்களை தாக்கும் போதெல்லாம் இந்த ரஜினி எங்கே போயிருந்தார் என கேள்வி எழுப்பி இருந்தனர். இயக்குநர் பாராதிராஜா இது குறித்து பேசும் போது இது ரஜினியில் வாய்ஸ் இல்லை என்றும் பாஜகவின் வாய்ஸ் என்றும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று அமெரிக்கா செல்கிறார். அங்கு புறப்படுவதற்கு முன் போயஸ் கார்டனில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காவல் துறையினரை தாக்கியது மன்னிக்க முடியாத குற்றம் என மீண்டும் தெரிவித்தார்.

தன்னை பற்றிய அரசியல் விமர்சனம் தவிர்க்க இயலாதது, என்றும் பொது வாழ்வுக்கு வந்துவிட்டால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்றார்.. நான் கட்சி துவங்குவது உறுதி, எப்போது துவங்குவேன் என்பதை இப்போது கூறமுடியாது என்றும் அது தொடர்பான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சீருடையில் உள்ள போலீசாரை தாக்குவது என்பது மன்னிக்க முடியாத குற்றம். நிர்மலா தேவி விவகாரம் அரசு சம்பந்தப்பட்டது என்றாலும் . குற்றம் நிரூபிக்கப்பட்டால் நிர்மலா தேவிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தியை நான் சந்தித்தது வழக்கமான ஒன்று தான். அவர் எனது 25 ஆண்டு கால நண்பர் என கூறிய ரஜினி காந்த எஸ்.வி. சேகர் விவகாரத்தில் அவர் பதிவிட்டது தவறானது, கண்டிக்கத்தக்கது. என்றும் தெரிவித்தார்.