8 வழிச்சாலை போன்ற வளர்ச்சி திட்டங்கள் அவசியம் தான் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், கல்வியில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் சிறந்து விளங்குவதாகவும் காமராஜரை போல ஒரு தலைவர் உருவாக வேண்டும் எனவும் தெரிவித்தார். 

விவசாயிகளும் மக்களும் எதிர்ப்பு தெரிவித்துவரும் சென்னை - சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக ரஜினியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், வளர்ச்சித் திட்டங்கள் அவசியம். அவற்றை வேண்டாம் என்று ஒதுக்கிவிட முடியாது. இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தினால் தான் தொழில்துறை வளரும். அதன்மூலம் வேலைவாய்ப்பும் பெருகும். அதனால் எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுக்கும் மக்களுக்கும் முறையான இழப்பீட்டை நிலமாகவும் பணமாகவும் வழங்கி அவர்களை சமாதானப்படுத்த வேண்டும். ஆனால் முடிந்தவரை விவசாய நிலங்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொண்டால் நல்லது என ரஜினிகாந்த் தெரிவித்தார். 

மேலும் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக கருத்து தெரிவித்த ரஜினி, நேரம் மற்றும் பணம் ஆகியவற்றின் விரயத்தை தடுக்கும் வகையில், இரண்டு தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது நல்லதுதான் என கருத்து தெரிவித்தார். 

அதேபோல லோக் ஆயுக்தா அமைத்ததற்கு வரவேற்பு தெரிவித்த ரஜினி, தான் மக்களவை தேர்தலுக்குள் கட்சி ஆரம்பித்து போட்டியிடுவது தொடர்பாக நேரம்தான் முடிவு செய்யும் என தெரிவித்தார்.