விஜயகாந்துடன் 15 நிமிடங்கள் மட்டுமே ரஜினி பேசிவிட்டு வந்த நிலையில் அதன் பிறகான நகர்வுகளால் தமிழக அரசிலேயே புரட்டிப்போடப்பட்டுள்ளது.

இன்று காலை சுமார் பத்து மணி அளவில் தான் ரஜினி விஜயகாந்த் வீட்டிற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவலை கூட விஜயகாந்த் தரப்பு கசியவிடவில்லை. ரஜினியின் தரப்பு தான் இந்த தகவலை மெனக்கெட்டு செய்தியாளர்களை அழைத்து கூறிக் கொண்டிருந்தது. இது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. காரணம் ரஜினி தரப்பில் எப்போதுமே அவரது நகர்வுகள் ரகசியமாகவே வைக்கப்படும்.

ஆனால் இந்த முறை தலைகீழாக ரஜினி தரப்பில் இருந்து அவரது நகர்வு குறித்த தகவல் வெளியானது. இதனால் தான் ரஜினி – விஜயகாந்த் சந்திப்பு அரசியலாக்கப்பட்டது. ஆனால் செய்தியாளர்களை சந்தித்த ரஜினியோ துளி கூட அரசியல் பேசவில்லை என்ற கூறிவிட்டு சென்றார். ஆனால் உண்மையில் உள்ளே இருந்த 15 நிமிடத்தில் 10 நிமிடங்கள் ரஜினி அரசியல் தான் பேசியுள்ளார். அதுவும் கேப்டனிடம் இல்லை, தற்போதைய தே.மு.தி.க அதிகார மையமான பிரேமலதாவிடம் என்கிறார்கள்.

முதல் ஐந்து நிமிடத்தில் விஜயகாந்த் சிகிச்சை விவரங்களை ரஜினி கேட்டு முடித்துவிட்டார். அதற்கு மேல் விஜயகாந்த சிகிச்சை குறித்து பேச பிரேமலதா தயாராக இல்லை. இந்த நிலையில் தான் அரசியல் குறித்து பேச்சு அங்கு அரங்கேறியுள்ளது. அதிலும் தற்போதைய சூழலில் மோடி தான் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்கிற தனது விருப்பத்தை ரஜினி வெளிப்படையாகவே பிரேமலதாவிடம் கூறியதாக சொல்கிறார்கள். மேலும் தே.மு.தி.கவும் நாட்டு நலன் கருதி நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று ரஜினி கூறியதாகவும் பேசப்படுகிறது.

சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே ரஜினி, விஜயகாந்த் வீட்டில் இருந்தார். இந்த தகவல் வெளியானதுமே தி.மு.க தரப்பு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. ஏனென்றால் ஏற்கனவே வடமாவட்டக்ஙளில் வாக்கு வங்கியை பலமாக வைத்துள்ள பா.ம.கவை எடப்பாடி கொத்திச் சென்றுவிட்டார். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் சுமார் 5 சதவீதம் வரை வாக்கு வங்கி வைத்துள்ள விஜயகாந்தையும் நழுவவிடக்கூடாது என்று ஸ்டாலின் முடிவெடுத்தள்ளார்.

இதனால் தான் தனது அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு அரசியல் கட்சி தலைவர் வீட்டின் படியேறிச் சென்று கூட்டணி குறித்து பேசிவிட்டு வந்துள்ளார் ஸ்டாலின். நேரடியாக கூட்டணிக்கு வருமாறு ஸ்டாலின் அழைக்காத நிலையிலும், கூட்டணிக்கான தங்களது கதவு திறந்தே இருப்பதாக ஸ்டாலின் சொல்லிவிட்டு வந்துள்ளார். மேலும் 4 முதல் ஐந்து தொகுதிகள் தரத் தயார் என்கிற ரீதியிலும் ஸ்டாலின் வாக்கு கொடுத்ததாகவும் சொல்கிறார்கள்.

அ.தி.மு.க – பா.ஜ.க – பா.ம.க கூட்டணியை விட தி.மு.க கூட்டணி பெட்டர் என்று பிரேமலதா தற்போது நினைக்க ஆரம்பித்துள்ளார். இந்த தகவல் கசிந்த பிறகு தான் ஸ்டாலின் ரிஸ்க் எடுத்து விஜயகாந்த் வீட்டிற்கே சென்று வந்துள்ளார். அதுவும் ரஜினி, விஜயகாந்த் வீட்டுக்கு சென்றதற்கான காரணம் குறித்து ஸ்டாலினுக்கு ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. பா.ஜ.கவின் தூதுவராக ரஜினி சென்று இருக்கலாம் என்று ஸ்டாலின் கருதியுள்ளார்.

எனவே தான் காலில் சுடு தண்ணீர் ஊற்றியதை போல் துடித்துக் கொண்டு விஜயகாந்த் வீட்டிற்கு சென்றுள்ளார் ஸ்டாலின். நேற்று வரை தே.மு.தி.கவை சீண்டுவார் இல்லை என்கிற நிலையில் தான் தமிழக அரசியல் இருந்தது. பா.ஜ.க மட்டுமே தே.மு.தி.கவுடன் பேசி வந்தது. அ.தி.மு.க தரப்பில் இருந்து தே.மு.தி.கவுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூட முன்வரவில்லை. ஆனால் ரஜினி வந்து சென்ற பிறகு ஸ்டாலினே விஜயகாந்த வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.

மேலும் மதுரையில் பேசிய ஓ.பி.எஸ் கூட விஜயகாந்துடன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று வெளிப்படையாக கூறியுள்ளார். இதன் மூலம் தே.மு.தி.கவை கூட்டணிக்குள் கொண்டுவர இரண்டு கட்சிகளுமே போட்டா, போட்டியில் உள்ளது தெரியவந்துள்ளது. மேலும் தி.மு.க கூட்டணிக்கு தே.மு.தி.க வரும் பட்சத்தில் தற்போதுள்ள சில கட்சிகளுக்கு தொகுதிகள் கிடைக்காத நிலை ஏற்படலாம்.

எனவே தி.மு.க கூட்டணியில் இருந்து ஒரு சில கட்சிகள் விலகி அ.தி.முக. தரப்புக்கோ அல்லது மூன்றாவதாக ஒரு அணியோ அமைக்க முயற்சிக்கலாம். ஏற்கனவே மூன்றாவது அணிக்கான வாய்ப்புக்காக தினகரனும், கமலும் காத்திருக்கிறார்கள். இப்படி ரஜினியின் ஒரே ஒரு சந்திப்பு தமிழக அரசியலையே புரட்டிப்போட்டுள்ளது.