இரும்பு போல் உழைத்து எறும்பு போல் இருக்க வேண்டும் கூறிய ரஜினி, தாம் மாற்றி கூறி விட்டதை உணர்ந்து திருத்தினார். தாம் மாற்றி கூறியதை இணையத்தில் பலர் கேலி பொருளாக்கி விடுவார்கள் என்றும் தம்மை தாமே கேலியும் செய்து கொண்டார் நடிகர் ரஜினிகாந்த். 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் நடித்துவரும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், சென்னை திரும்பிய ரஜினிகாந்த் அதே ஏ.சி.சண்முகம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.

புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு டாக்டர் பட்டம் அளிக்கப்பட்ட நிலையில், அதற்காக நேற்று கிண்டியிலுள்ள ஸ்டார்  ஓட்டலில் அவருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவில் கலந்துகொண்டு பேசிய ரஜினி, "அனைவரின் இதயத்திலும், மனதிலும், ஜீவனிலும் ஆண்டவன் இருக்கிறான். ஏழைகளுக்கு உதவி செய்வதுதான் முக்கியம். அதனைச் செய்தாலே ஆண்டவனுக்குச் செய்த புண்ணியம் கிடைக்கும். இங்கிருக்கக்கூடியவர்கள் அனைவருமே உழைப்பாளிகள். நன்றாக உழைத்தவர்கள் அனைவருமே முன்னேறிவிட முடியாது. வெற்றியும் பெற்றுவிட முடியாது எனக் கூறினார்.

மேலும் பேசிய ரஜினி, சண்முகத்தின் உழைப்பு தம்மை மிகவும் கவர்ந்த ஒன்று என்றார்.  அதைவிட சண்முகத்தின் தலை அலங்காரம் தம்மை, மிகவும் கவர்ந்த ஒன்றும் என்றும் தானும் அவரை போல முடியை வைத்திருக்கலாம்  என்றும் நகைசுவையாக அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்துப் பேசிய அவர், வெற்றியடைய வேண்டும், நிறைய பணம் மற்றும் பெயரைச் சம்பாதிக்க வேண்டும் என்றுதான் அனைவரும் உழைக்கிறார்கள். ஆனால், வெறும் முயற்சியால் உழைப்பால் மட்டும் முன்னேற முடியாது. உழைப்புடன் ஆண்டவன் அருளும் தேவை. அதனுடன் நல்ல எண்ணமும் இருந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும், நம் உடம்பை நாம் பிஸியாக வைத்துக்கொண்டால் உடல் நன்றாக இருக்கும் என்று பேசினார்.