பா.ஜ.கவின் பி டீமாகவே ரஜினி தமிழகத்தில் அரசியல் கட்சி துவங்க உள்ளார் என்பது பரவலான குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டுகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் ஸ்டெர்லைட் விவகாரமாகட்டும், எட்டு வழிச்சாலை திட்டமாகட்டும் பா.ஜ.கவின் நிலைப்பாட்டை ஒட்டியே ரஜினியின் நிலைப்பாடும் இருக்கிறது. மேலும் பா.ஜ.கவின் தமிழக ஆலோசகரான ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வதை கேட்டே ரஜினி செயல்பட்டு வருவதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது.
   
இதனால் சமூக வலைதளங்களில் ரஜினியை பா.ஜ.கவின் ஆதரவாளராக சித்தரித்து தி.மு.க., கமல் ரசிகர்கள், நாம் தமிழர் கட்சியினர் மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க, ரஜினியை சந்திக்கும் அவரது நண்பர்கள் கூட உங்களை பா.ஜ.க அனுதாபியாகவே மக்கள் பார்க்கின்றனர் என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற விவகாரங்களில் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் பா.ஜ.க எதிர்ப்பு மனநிலையில் உள்ளது போன்ற ஒரு தோற்றம் உள்ளது.


   
எனவே அரசியல் களத்திற்கு வருவதற்கு முன்னரே தான் பா.ஜ.கவின் அனுதாபி என்றோ, அவர்களின் பி டீம் என்றோ விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதை ரஜினி விரும்பவில்லை. இதனால் பா.ஜ.க தலைவர்களிடம் இருந்து ரஜினி சற்று ஒதுங்கியே இருந்து வருகிறார். இந்த நிலையில் தான் கடந்த வாரம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார். உடனடியாக ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
   
நதி நீர் இணைப்பு எனும் வாஜ்பாய் கனவுத் திட்டத்திற்கு ஆதரவாக ரஜினி மிக தீவிரமாக பேசி வந்தார். எனவே வாஜ்பாய் உடலுக்கு ரஜினி நேரில் சென்று அஞ்சலி செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஜினியே மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதோடு நிறுத்திக் கொண்டார். அப்போதே ரஜினி ஏன் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்தவில்லை என்கிற கேள்விகள் எழுந்தன.


   
இந்த நிலையில் வாஜ்பாயின் அஸ்தி தமிழகம் கொண்டுவரப்பட்டு சென்னையில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது, பா.ஜ.க நிர்வாகிகள் சென்னையில் உள்ள முக்கியஅரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்களை தொடர்பு கொண்டு விருப்பம் இருந்தால் நேரில் வந்து வாஜ்பாய் அஸ்திக்கு மரியாதை செலுத்தலாம் என்று கூறினர். இதனை ஏற்றே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் வரை கமலாலயம் வந்தனர்.


   
மற்றவர்களுக்கு அழைப்பு விடுத்தது போலவே ரஜினிக்கும் பா.ஜ.க நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர். இதனை ஏற்று கமலாலயம் வருவதாக ரஜினி தங்களிடம் கூறியதாக பா.ஜ.க நிர்வாகி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார். எனவே ரஜினி வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்த வர உள்ளார் என்று தகவல்கள் பரவின. ஆனால் ரஜினி கடைசி வரை பா.ஜ.க அலுவலகத்திற்கு வரவே இல்லை.
   
பா.ஜ.க விவகாரங்களில் ஒதுங்கி இருப்பதே தனது அரசியல் எதிர்காலத்திற்கு நல்லது என்று கருதியே ரஜினி வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்த கூட செல்லவில்லை என்று கூறப்படுகிறது.