கடந்த நவம்பர் மாதம் வரை ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து அரசியல் நடவடிக்கைகளில் ரஜினி தீவிரம் காட்டி வந்தார். ஆனால் கடந்த டிசம்பரில் இருந்தே ரஜினியின் அரசியல் நடவடிக்கைகள் குறைந்துவிட்டன. அதிலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் செல்வதை தவிர்த்ததன் மூலமே ரஜினிக்கு தற்போதைக்கு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் ஐடியா இல்லை என்பது தெளிவானது.

அதோடு மட்டும் அல்லாமல் கடந்த டிசம்பரில் இரண்டு மூன்று முறை செய்தியாளர்களை ரஜினி சந்தித்தார். ஆனால் இரண்டு மூன்று முறையுமே அரசியல் பேசுவதை தவிர்த்துவிட்டார். இதோடு மட்டும் அல்லாமல் மக்கள் மன்ற பொறுப்புகளை கவனித்து வந்த இளவரசனையும் ரஜினி வீட்டுக்கு அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் மன்ற பணிகள் அப்படியே கடந்த ஒன்றரை மாத காலமாக ஸ்தம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ரஜினியின் நண்பரும் மக்கள் மன்ற நிர்வாகிகளில் ஒருவருமான சுதாகர் மட்டுமே அவ்வப்போது ராகவேந்திரா மண்டபம் வந்து செல்வதாக கூறப்படுகிறது. அவரும் கூட ரசிகர் மன்றம் தொடர்பான பிரச்சனைகளை மட்டுமே கேட்டு அதற்கு தீர்வு தெரிவித்து வருவதாக சொல்லப்படுகிறது. புதிதாக நிர்வாகிகள் நியமனம், காலியாக உள்ள பொறுப்புகளுக்கு புதியவர்களை நியமிப்பது போன்ற பணிகள் கடந்த ஒன்றரை மாதமாகவே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற செயலாளர் காலமானதை தொடர்ந்து அந்த பொறுப்புக்கு தற்போது வரை யாரையும் புதிததாக நியமிக்கவில்லை. இதே போல் தமிழகம் முழுவதும் புதிய பொறுப்பாளர்கள் தொடர்பாக மாவட்ட நிர்வாகிகள் அனுப்பிய பரிந்துரை கடிதங்களும் பிரித்து கூட பார்க்கப்படாமல் ராகவேந்திரா மண்டபத்தில் குவிந்து வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் ரஜினி எங்காவது  வெளியே சென்று வந்தால் உடனடியாக நிர்வாகிகளை சந்தித்து பேசுவது வழக்கம்.

ஆனால் அமெரிக்கா சென்று திரும்பிய நிலையில் ஒரு முறை  கூட ரஜினி ராகவேந்திரா மண்டபம் பக்கம் செல்லவில்லை. இதே போல் மக்கள் மன்ற நிர்வாகிகளையும் ரஜினி வீட்டில் பார்க்க முடியவில்லை. இது குறித்து ரஜினிக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்த போது, தலைவர் மகளின் திருமண விஷயத்தில் பிசியாக இருப்பதாக கூறுகிறார்கள். திருமணத்தை நடத்தும் விதம் தொடர்பான பிரச்சனை இன்னும் வீட்டில் ஓயவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

மகளின் திருமணம் முடிந்த பிறகு தான் ரஜினி டென்சன் இல்லாமல் இருப்பார் என்றும் அதன் பிறகு தான் மறுபடியும் அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் அரசியல் வேண்டாம் என்று ரஜினி ஒதுங்கியிருப்பதாகவும், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை பார்த்த பிறகே அரசியலில் ஒரு முடிவை அறிவிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.