நடிகர் ரஜினி கட்சியும் தொடங்கமாட்டார். பாஜகவிலும் சேர மாட்டார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.  
இடைத்தேர்தல் அன்று நாங்குநேரி தொகுதியில் நுழைந்ததாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை திரும்பிய கே.எஸ். அழகிரி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். வழக்குப்பதிவு குறித்து எழுப்பட்ட கேள்விக்கு, ''தமிழக அரசுக்கு தேர்தலில் நெருக்கடி ஏற்பட்டதும் தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஒரு கட்சியின் தலைவர், எம்.பி. ஆகியோர் தவறான காரியங்களில் எல்லாம் ஈடுபட மாட்டார்கள். இதுபோன்ற தவறுகளை அரசு திருத்தி கொள்ள வேண்டும்” என்று கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.
 நாங்குநேரியில் வெற்றி வாய்ப்பு குறித்தும், வாக்குப்பதிவு குறைந்தது குறித்தும் கேட்கப்பட்ட கேள்விக்கு, “இடைத்தேர்தலில் ஆளும்கட்சி தனது அதிகார பலத்தையும் பண பலத்தையும் அளவுக்கு அதிகமாக செய்துள்ளது. அவர்களிடம் பணமும் அதிகாரமும்தான் இருந்ததே தவிர மக்களின் ஆதரவும் விருப்பமும் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கு இருந்தால், அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நாங்குநேரியில் வாக்குப்பதிவு குறைய ஒரு தரப்பினர் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுப்பட்டனர். புறக்கணிப்பில் ஈடுப்பட்டவர்களிடம் வாக்களிக்க வேண்டும் என்று விளக்கி சொன்னதில் பலர் வந்து வாக்களித்தனர். சிலர் வாக்களிக்காமல் புறக்கணித்தார்கள்.” என்று கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.
ரஜினி பாஜகவில் இணைய வேண்டும் என்று பொன். ராதாகிருஷ்ணன் அழைத்தது பற்றிய கேள்விக்கும் அழகிரி பதில் அளித்தார். “ரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் ஆசைப்பட்டிருக்கிறார். அவருடைய ஆசைக்கு யாரும் குறுக்கே நிற்க முடியாது. எதையும் ஆசைப்படுவது தவறில்லை. உண்மையில், ரஜினிகாந்த் கட்சி தொடங்கி பாஜகவில் சேர்ந்தால் தமிழகத்திற்கு எந்த நன்மையும் இல்லை. ரஜினி அறிவுபூர்வமானவர். ரஜினி தவறிப் போய் எதிலும் மாட்டிக் கொள்ள மாட்டார். கட்சியும் தொடங்கமாட்டார். பாஜகவிலும் சேர மாட்டார். ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர்கள் அரசியல் கட்சிக்கு வர மாட்டார்கள்” என்று கே.எஸ். அழகிரி பேசினார்.