நடிகர் ரஜினிகாந்த் கழுவுற மீனில், நழுவுற மீன். அவர் பா.ஜனதா கட்சியின் வலையில் சிக்க மாட்டார் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கோவையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது, ’’பெரியார் ஒரு சமூக சீர்திருத்தவாதி. நடிகர் ரஜினிகாந்த் பா.ஜனதா கட்சிக்கு சார்பாக இருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. பெரியாரை விமர்சித்த நடிகர் ரஜினிகாந்த் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது துக்ளக் ஆசிரியர் சோ, பா.ஜனதாவை விமர்சித்ததை ஏன் தெரிவிக்கவில்லை. நடிகர் ரஜினிகாந்த் கழுவுற மீனில், நழுவுற மீன். அவர் பா.ஜனதா கட்சியின் வலையில் சிக்க மாட்டார்.

5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை என்பது சமூக நீதிக்கு எதிரான கல்வி முறை. திறமை என்ற பெயரில் மனுதர்மத்தை கொண்டு வர ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கிறது. பெரியார் பாதையை பின்பற்றி வந்த அ.தி.மு.க. இந்த பொதுத்தேர்வை ஏற்றுக்கொண்டது தவறு. ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை என்பது சாத்தியமே இல்லை. உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் முடிவெடுக்கப்படும். தமிழ்நாட்டில் ஒரு அரசாங்கமே நடைபெறவில்லை. நீட் பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு நிறுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது’’ எனத் தெரிவித்தார்.