அரசியலுக்கு வருவாரா... மாட்டாரா..? என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த் வரும் நவம்பர் மாதம் கட்சி தொடங்க உள்ளதாகவும், மதுரையில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

கடந்த 30 ஆண்டுகாலமாக ரஜினி அரசியலுக்கு இதோ வருகிறார்... அதோ வருகிறார் என எதிர்பார்ப்பு  அவரதுரசிகர்களிடையே எழுந்தது. அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரசிகர்களை அழைத்து தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை. அதனை சரி செய்ய வேண்டும். கருணாநிதி, ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழக அரசியலில் வெற்றிடம் உருவாகி இருக்கிறது. தமிழகத்தில் நேர்மையான ஆட்சி நடைபெற வேண்டும் என பேசியது அவரது அரசியல் வருகைக்கு அச்சாரமாக பார்க்கப்பட்டது. வரும் சட்ட மன்றத்தேர்தலில் தனித்து போட்டி எனவும் அறிவித்தார். 

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ரஜினியின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மார்ச் 12ம் தேதி சென்னை லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ''மாற்றம் வேண்டி மக்களிடம் எழுச்சியும், அலையும் வரட்டும் அரசியலுக்கு வருகிறேன்,'' எனக் கூறியிருந்தார். இந்நிலையில் கொரோனா தொற்று பரவியதால் அவர் கட்சி தொடங்கும் நடவடிக்கை தாமதமாகி வந்தது.  இதனால் அவர் கட்சி தொடங்குவாரா என்கிற சந்தேகம் எழுந்தது. 

இதனிடையே 'இப்போது இல்லை என்றால் இனி எப்போதும் இல்லை' என, அவரது ரசிகர் பெருமக்கள் போஸ்டர்கள் ஒட்டி ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்துக்கு அழைப்பு விடுத்து வந்தனர். 

இந்நிலையில், 'ரஜினிகாந்த் நவம்பர் மாதம் கட்சி தொடங்குகிறார். அரசியல் கட்சி தொடங்குவதில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் ஒரு போதும் பின்வாங்கமாட்டார். கொரோனா இல்லாமல் இருந்திருந்தால் ரஜினி தொடங்கும் கட்சியின் முதல் மாநாடு மதுரையில் நடைபெற்றிருக்கும். அதற்கான முடிவை அவர் ஏற்கனவே எடுத்திருந்தார். அதனால், கட்சி துவங்கியதும் முதல் மாநாடு மதுரையில் நடக்க வாய்ப்புள்ளது' என தகவல்கள் வெளியாகி உள்ளன.