ரஜினிதான் அடுத்த முதல்வராக வர வேண்டும். இந்தக் கருத்தை சொல்வதால் அவர் வருத்தப்பட்டாலும் பரவாயில்லை என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். 
கரூரில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சமீபத்தில் நடந்த ரஜினி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், இளைஞர்களுக்குத் தேர்தலில் வாய்ப்பு அளிப்பது, பிரதிபலன் பாராமல் நிர்வாகிகள் உழைப்பது உள்ளிட்ட முடிவுகளை எடுத்தாக சொல்கிறார்கள். ஒரே ஒரு விஷயம் ஏமாற்றமளிப்பதாக மட்டுமே ரஜினி கூறினார்.  கட்சி பொறுப்பிலே இருந்து கொண்டு, முதல்வர் பொறுப்பை வேறொருவருக்கு வழங்கும் கருத்தை அவர் முன் வைத்ததாகவும், அந்த யோசனையை நிர்வாகிகள் மறுத்ததாகவும் சொல்கிறார்கள்.


ரஜினி எப்போதும் பதவி நாற்காலிக்கு ஆசைபட்டவர் இல்லை. அடுத்த தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் என சிந்திப்பவர் ரஜினி. அதுதான் ஆன்மிக அரசியலின் கொள்கையும்கூட. ஆனால், சூழல் அப்படி இல்லை. ரஜினிதான் அடுத்த முதல்வராக வர வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்தக் கருத்தை சொல்வதால் அவர் வருத்தப்பட்டாலும் பரவாயில்லை.


மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக விஷம பிரசாரங்கள் நடைபெறுவதால், குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு (சி.ஏ.ஏ.) எதிரான போராட்டங்கள் நடக்கின்றன. இந்தப் போராட்டங்களினால் போலீசாருக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்களை தமிழக அரசு முடிவுக்கு கொண்டுவர வேண்டும். தமிழகத்தில் அமைதியும் நல்லிணக்கமும் ஏற்பட முழு முயற்சியை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்” என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.