படம் தயாரிப்பதாக கூறிக் கொண்டு விஜய் மற்றும் ரஜினிக்கு அதிக அளவில் சன் டிவியில் விளம்பரம் கொடுக்கப்படுவதால் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் – முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் சர்கார் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. முதலில் சரி சன் டிவியின் பிஸ்னஸ் படம் தயாரிப்பது, அதனால் விஜயை வைத்து படம் எடுத்தால் என்ன? யாரை வைத்து படம் எடுத்தால் என்ன? என்று தான் தி.மு.க தரப்பு இருந்தது. ஆனால் விஜய் படத்தின் பெயரை சன் தொலைக்காட்சியின் ஆறு மணி செய்தியில் வெளியிடப்போவதாக விளம்பரம் செய்தது முதல் அதிருப்தி உருவாகியுள்ளது.  

அதிலும் படத்திற்கு சர்கார் என்று பெயர் வைத்துள்ளதையும் தி.மு.க தரப்பு ரசிக்கவில்லை. தி.மு.வின் மற்றொரு மவுத் பீஸ் என்றே சன் டிவி அரசியல் அறிந்தவர்களால் கருதப்படுகிறது. அப்படி இருக்கையில் விஜய் போன்ற ஒரு மாஸ் ஹீரோவை வைத்து அரசியல் படம் சன் டிவி எடுப்பது தி.மு.க தரப்புக்கு ஏற்புடையதாக இல்லை. அதுமட்டும் இல்லாமல் விஜயை வைத்து சர்கார் ஆடியோ லாஞ்சை மிக பிரமாண்டமாக நடத்தியதுடன், நேரலையிலும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியதையும் ஸ்டாலின் அபிமானிகளால் ஜீரனித்துக் கொள்ள முடியவில்லை. 

மேலும் மேடையில் பேசிய அனைவரும் விஜயை தளபதி, தளபதி என்று வார்த்தைக்கு வார்த்தை பேசியது ஒரு புறம் என்றால் சன் குழும தலைவர் கலாநிதி மாறனும் விஜயை தளபதி என்றது தான் தற்போது பிரச்சனைக்கு காரணமாக உள்ளது. தளபதி என்று ஸ்டாலினை தி.மு.க தொண்டர்கள் அழைத்து வரும் நிலையில் விஜயை சன் குழும தலைவர் கலாநிதி மாறன் அழைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதற்கு பெருந்தன்மையாக ஸ்டாலின் மகன் உதயநிதி விளக்கம் கொடுத்தாலும் கூட தி.மு.க.விற்கு எதிரான நிலைப்பாடு கொண்ட விஜயை சன் டிவி புரமோட் செய்வதை ஏற்க முடியாது என்றே தி.மு.க தரப்பு கலாநிதி தரப்புக்கு செய்தி அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதே போல் அரசியல் பிரவேசம் அறிவித்துள்ள ரஜினியை வைத்தும் சன் பிக்சர்ஸ் படம் எடுத்து வருவதும் தி.மு.க.விற்கு எரிச்சலை உருவாக்கியுள்ளது. 

அடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் தான் என்று தி.மு.க பிரச்சாரம் செய்து வரும் நிலையில் முதலமைச்சர் கனவுடன் அரசியலில் காலடி எடுத்து வைக்க உள்ள ரஜினிக்கு பேட்ட படத்தின் மூலம் அதிக விளம்பரத்தை கொடுப்பது ஸ்டாலின் – சன்குழுமம் இடையே மன வருத்தத்தை ஏற்படுத்தும் என்றும் பேசப்படுகிறது.