பெரியார் குறித்து அவமதிப்பு கருத்துகள் கூறியதற்கு நடிகர் ரஜினிகாந்த் தகுந்த விலை கொடுப்பார் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "சாதாரண ஏழை எளிய மாணவர்கள் மருத்துவப் படிப்பில் பங்குபெற முடியாத சூழல் உள்ளது. இவற்றையெல்லாம் எதிர்த்துப் போராட வேண்டிய தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது. ஏற்கனவே மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசு அதைத் திருப்பி அனுப்பியதற்குக் கூட எதிர்ப்பு தெரிவிக்காமல் நீட் தேர்வு விஷயத்தில் தமிழக அரசு மெத்தனம் காட்டுகிறது.

கல்வி முறையில் 5, 8, 9ம் வகுப்புகளுக்கு தனித்தனி தேர்வுகள் எழுதவேண்டும் என்று சொல்லி பிள்ளைகளின் படிப்பில் மண்ணைப் போடுகின்ற அளவிற்கு உள்ளது. பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர் உள்ளிட்டோர் அரும்பாடுபட்டு உருவாக்கிய ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’என்றிருந்த நிலை தற்போது குலக்கல்வி திட்டத்தை கொண்டு வரக்கூடிய அளவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

நீட் தேர்வு மற்றும் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து நாடு தழுவிய பிரச்சாரத்தை கன்னியாகுமரியிலிருந்து திருத்தணி வரை தொடர்ந்து 10 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறோம். இன்று மாலை நாகர்கோவிலில் பிரச்சாரம் தொடங்கி ஜனவரி 30ஆம் தேதியன்று சென்னையில் நிறைவுபெறுகிறது.

பெரியார் பற்றி நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு அவர் வருத்தம் தெரிவிக்காதது குறித்துக் கேட்டதற்கு, அதற்குத் தகுந்த விலையை அவர் கொடுப்பார் என்றும், தவறான தகவலை தெரிவித்து மற்றவர் சுட்டிக்காட்டும்போது அதை திருத்திக் கொள்வதுதான் சரி. ரஜினி இனிமேல் அரசியலுக்கு வந்தால் அவர் பேசுவது எப்படி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்வின்போது அவர் நிலை என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது”என்று தெரிவித்தார்.