rajini says Spirituality is related to the soul
ஆன்மீகம் என்பது ஆன்மா சம்பந்தப்பட்டது எனவும் ஆன்மீக அரசியல் என்பது சாதி, மத பேதமின்றி உண்மையான அரசியல் எனவும் நடிகர் ரஜினி காந்த் தெரிவித்துள்ளார்.
நான் அரசியலுக்கு வருவேன் எனவும் இது காலத்தின் கட்டாயம் எனவும் நடிகர் ரஜினிகாந்த் நேற்று முந்தினம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் எனவும் அதற்கு முன்பு ஒவ்வொரு தெருவிலும் தனது ரசிகர் மன்றம் தொடங்கப்பட வேண்டும் எனவும் ரசிகர்களிடம் குறிப்பிட்டார்.
உண்மை, உழைப்பு, உயர்வு இதுதான் தாரக மந்திரம். நல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம். நல்லதே நடக்கும். இதுதான் நமது கொள்கை. வரும் தேர்தலில், நம்ம படையும் இருக்கும் என்று ரஜினிகாந்த் கூறினார்.
ரஜினியின் இந்த அரசியல் பிரவேச அறிவிப்பு தமிழக அரசில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த நீண்ட நாட்களாகவே தனது அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி கூறி வந்த நிலையில், அவரது இந்த அறிவிப்பு குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இதைதொடர்ந்து, நேற்று தமது இணைதளத்தை தொடங்கியுள்ளார் ரஜினி. தமது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைக்க www.rajinimandram.org என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், சென்னை எழும்பூரில் நடிகர் ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.
அங்கு கேமராக்கள் அனுமதிக்கப்படவில்லை. பத்திரிக்கையாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியே இது என ரஜினி விளக்கினார்.
இந்த கலந்துரையாடலை முடித்துவிட்டு வெளியே வந்த ரஜினியிடம் செய்தியாளர்கள் ஆன்மீக அரசியல் குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ரஜினி, ஆன்மீகம் என்பது ஆன்மா சம்பந்தப்பட்டது எனவும் ஆண்மீக அரசியல் என்பது சாதி, மத பேதமின்றி உண்மையான அரசியல் எனவும் தெரிவித்தார்.
