rajini says i am also worked as a journalist

தாமும் பத்திரிக்கையில் வேலை பார்த்தவன் தான் எனவும் தமது அரசியல் வருகைக்கு பத்திரிக்கையாளர்களின் உதவி தேவை எனவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

நான் அரசியலுக்கு வருவேன் எனவும் இது காலத்தின் கட்டாயம் எனவும் நடிகர் ரஜினிகாந்த் நேற்று முந்தினம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். 

வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் எனவும் அதற்கு முன்பு ஒவ்வொரு தெருவிலும் தனது ரசிகர் மன்றம் தொடங்கப்பட வேண்டும் எனவும் ரசிகர்களிடம் குறிப்பிட்டார். 

உண்மை, உழைப்பு, உயர்வு இதுதான் தாரக மந்திரம். நல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம். நல்லதே நடக்கும். இதுதான் நமது கொள்கை. வரும் தேர்தலில், நம்ம படையும் இருக்கும் என்று ரஜினிகாந்த் கூறினார். 

ரஜினியின் இந்த அரசியல் பிரவேச அறிவிப்பு தமிழக அரசில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த நீண்ட நாட்களாகவே தனது அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி கூறி வந்த நிலையில், அவரது இந்த அறிவிப்பு குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இதைதொடர்ந்து, நேற்று தமது இணைதளத்தை தொடங்கியுள்ளார் ரஜினி. தமது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைக்க www.rajinimandram.org என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளார். 

இந்நிலையில், சென்னை எழும்பூரில் நடிகர் ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். 

அப்போது, தாமும் பத்திரிக்கையில் வேலை பார்த்தவன் தான் எனவும் தமது அரசியல் வருகைக்கு பத்திரிக்கையாளர்களின் உதவி தேவை எனவும் தெரிவித்தார். 

முறையான செய்தியாளர் சந்திப்பின் போது உங்களுடய கேள்வியை கேட்கலாம் எனவும் இங்கிருந்து அரசியல் புரட்சி உண்டாக வேண்டும் என்பது எனது ஆசை எனவும் குறிப்பிட்டார். 

இது வரை லோகோ க்களை மட்டும் தான் பார்த்து உள்ளேன் எனவும் இப்போது நிருபர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி எனவும் தெரிவித்தார். 

ஊடகங்களை எவ்வாறு கையாளுவது என எனக்கு சமீப காலமாக தெரியவில்லை எனவும் மக்களிடம் என்னை முறையாக சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி பேசினார். 

சுதந்திரப்போராட்டத்தில் தமிழகத்திற்கு முக்கிய பங்கு உண்டு எனவும் சுதந்திர போராட்டத்தை போல் மற்றொரு போராட்டத்திற்கு தயாராக உள்ளோம் எனவும் தெரிவித்தார். 

நான் முதன் முதலில் பொம்மை பத்திரிக்கைக்கு தான் பேட்டி அளித்தேன் எனவும் தவறு ஏதேனும் செய்திருந்தால் மன்னித்து கொள்ளுங்கள் எனவும் குறிப்பிட்டார். 

மிகப்பெரிய புரட்சியெல்லாம் தமிழகத்தில் தான் தொடங்குகின்றன எனவும் பேசினார்.