ரஜினி வீட்டுத் திருமணத்தில் கலந்துகொண்டு திரும்பிய கையோடு சுடச்சுட தனது ஃபேஸ்புக் ப்ரொஃபைல் படத்தை ரஜினியுடன் இருக்கும் படமாக மாற்றினார் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி. இதைப் பார்த்த ரஜினி, அழகிரி ஆதரவாளர்கள் பயங்கர குஷியாகியானர்.

சமீபத்தில் முக அழகிரி பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்ன ரஜினி, “நீங்கள் நேர்மையான நல்ல மனிதர். அரசியல் காலண்டரில் கடைசிப்பக்கம் என்பது யாருக்குமே இல்லை; எதிர்காலத்தில் எழுந்து வருவீர்கள்,” என்று வாழ்த்து தெரிவித்திருந்தார். இது அழகிரிக்கும் அவர் ஆதரவாளர்களுக்கும் தனி உற்சாகத்தைத் தந்தது. ரஜினியின் அரசியல் பயணத்தில் அழகிரி இணைவார் என பேச்சுக்கள் எழுந்தன.

கருணாநிதி மறைந்த பின் கட்சியை விட்டு மொத்தமாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அஞ்சாநஞ்சன் மு.க.அழகிரி மதுரையில் வசித்து வருகிறார். திமுகவில் மீண்டும் தன்னை இணைத்துக் கொள்ள பகீரத ப்ரயத்தனம் நடத்தியும் எதுவும் நடக்கவில்லை. அவர் பாஜகவில் இணைய உள்ளதாக அவ்வப்போது புஷ்வானம் கிளப்பப்பட்டன. 

அரசியலில் இருந்து மு.க.அழகிரி ஒதுங்கி இருந்தாலும் ரஜினியுடன் தொடர்பில் இருந்தே வந்தார். ரஜினியின் இரண்டாவது மகள் திருமணத்திற்கு வந்திருந்த  அழகிரியை, ரஜினி அன்புடன் வரவேற்று பக்கத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த காட்சி, புகைப் படங்களாக வெளியாகின. இந்த திருமணத்துக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட எத்தனையோ தலைவர்கள் வந்திருந்தாலும், அழகிரியின் வருகையும், அவருடன் ரஜினியும் பேசிக்கொண்டிருந்த படமும்தான்  அதிகமாக  வைரலானது.

திருமணத்துக்கு வந்து போன கையோடு, ரஜினியுடன் தான் உள்ள படத்தை ப்ரொபைலில் வைத்துவிட்டார் அழகிரி. இந்த படத்தைப் பார்த்த அழகிரி ஆதரவாளர்களும் ரஜினி ரசிகர்களும், “அன்பு தலைவரும் அஞ்சா நெஞ்சரும் இணைந்து செயல்பட வேண்டும்… அதுதான் தமிழ் நாட்டுக்கே நல்லது எனத் தெரிவித்து வந்தனர். அரசியலில் கடைசி பக்கம் என்பதே கிடையாது என மு.க.அழகிரிக்கு ஆறுதல் சொல்லி உற்சாகப்படுத்தி வந்தார் ரஜினி. 

அழகிரி நெருக்கடியான நிலையில் இருந்தபோது, ‘நாம கட்சி ஆரம்பிக்கும் போது, எனக்கு பக்கபலமா நீங்க இருங்க. மத்ததெல்லாம் தானா நடக்கும்'' என ரஜினி கேட்டுக் கொள்ள, மறுக்காமல் ஒப்புக்கொண்டாராம் அழகிரி. அதன்பிறகு சென்னைக்கு போறபோது கட்டாயம் ரஜினியை பார்க்காமல் வருவதில்லை அழகிரி. சமீபகாலமாக அடிக்கடி ரஜினியோடு பேசி வருகிறார் அழகிரி.

இதுகுறித்து அழகிரி ஆதரவாளர்கள், ’’அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு அழகிரி அண்ணே தயாராவது மட்டும் புரிகிறது. அடுத்த ரவுண்டு மிக பெருசா அடி எடுத்து வைக்கபோகிறார் அதில் எங்களோடு ரஜினி கைகோர்பார் என்பது மட்டும் நிச்சயம். தேர்தல் வேலைகளில் அண்ணனை அடிச்சுக்க முடியாது. யாரை தூக்கணும் யாரை சேர்க்கனும் எல்லாம் அண்ணனுக்கு அத்துபிடி. அது தனது அப்பா கலைஞரிடமிருந்து அரசியல் காய் நகர்த்தலை கத்து கொண்டவர். புலிகுட்டிக்கு பாய கத்துகொடுக்கணுமா? பாருங்க அடுத்த சட்டமன்ற தேர்தல் தமிழகத்திற்கு ஒரு வித்தியாசமான தேர்தலாக அமையும். ரஜினியை மிகப்பஎரிய தலைவராக்குவதில் அண்ணனின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும்’’என்கிறார்.

ரஜினியுடன் மு.க.அழகிரி கைகோர்த்தால், தென்மாவட்டம் மட்டுமில்லை. தமிழக முழுவதுமே ஒரு அதிர்வலையை ஏற்படுத்தும். தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த கருணாநிதி மீது  ரஜினிக்கு மிகுந்த மரியாதை உண்டு. முறையாக தலைமையிடத்தில் இருந்து அறிவிப்பு வரட்டும். இப்போதுதான் இன்னும் சுறுசுறுப்பாக களத்தில் இறங்க தயாராக இருக்கிறோம்’’என்கிறார்கள் ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள். ஆக அரசியல் வெற்றிடத்தை நிரப்ப ரஜினிக்கு தோள் கொடுக்கத் தயாராகி வருகிறார் மு.க.அழகிரி.