அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் திமுகவை வீழ்த்த முடியாது என்பதால் ரஜினியுடன் பயணிக்க பாஜக தயாராகி வருவதற்கான சாத்தியங்கள் தெரிய ஆரம்பித்துள்ளன.

அண்மையில் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு அதிமுக சார்பில் தடல் புடல் வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் அதிமுகவின் கூட்டணி தொடரும் என்று தடலாடியாக அறிவித்தார். அதனை தொடர்ந்து அன்று இரவே அமித் ஷாவை லீலா பேலஸ் ஹோட்டலில் சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது ஓபிஎஸ்சும் உடன் இருந்தார். ஆனால் அமித் ஷா எங்கும் அதிமுகவுடனான கூட்டணி குறித்து பேசவில்லை.

பாஜகவுடன் தான் கூட்டணி என்று கூறிய பிறகும் கூட அதிமுகவிற்கு பாஜக தரப்பில் இருந்து பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கப்படவில்லை. தமிழக பாஜக தலைவர்களும் கூட அதிமுகவுடனான கூட்டணி குறித்து கேட்கும் போதெல்லம் அதை எல்லாம் மேலிடம் பார்த்துக் கொள்ளும் என்றே பதில் அளித்து வந்தனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்கியுள்ளதால் தமிழகத்தில் புதிய அரசியல் கணக்குகள் ஆரம்பமாகியுள்ளன. அதிமுகவை பொறுத்தவரை பாஜகவை ஒரு சுமையாகவே கருதி வருகிறது.

ஆனால் மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ளதால் அந்த கட்சியை பகைத்துக் கொள்ள அதிமுக விரும்பவில்லை. இதனால் தான் வேண்டா வெறுப்பாக தேடிப் போய் அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் சேர வேண்டியுள்ளது. இதே போல் அதிமுக என்ன தான் அனுசரணையாக இருந்தாலும் தேர்தல் என்று வந்தால் அதிமுக – பாஜக கூட்டணி ஒர்க் அவுட் ஆகவில்லை என்பதை பாஜக மேலிடம் உணர்ந்து வைத்துள்ளது. அதற்கு கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தான் சான்று என்பதையும் பாஜக விற்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

எனவே பாஜக எப்போதுமே தமிழகத்தில் மாற்று அரசியல் வியூகத்திற்கு தயாராகவே இருந்து வருகிறது. அந்த வகையில் ரஜினியுடன் கூட்டணி என்றால் தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று பாஜக நம்புகிறது. ஏன் ரஜினி கட்சி ஆரம்பிக்கப்போவதே தமிழகத்தில் பாஜகவை கரைசேர்க்கத்தான் என்றும் கூட கூறப்படுவதுண்டு. மேலும் செய்தியாளர்களிடம் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி பாஜக – ரஜினி கூட்டணி இயற்கையான கூட்டணி என்று கூறியுள்ளார். இதே போல் ஓபிஎஸசும் கூட அதிமுகவுடன் ரஜினி கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி ரஜினி விவகாரத்தில் மிகவும் எச்சரிக்கையாக உள்ளார். இப்படி பல்வேறு நிலைகள் தமிழக அரசியலில் நிலவுவதால் மறுபடியும் ஓபிஎஸ் – இபிஎஸ் மோதலை ஏற்படுத்தி இரட்டை இலை சின்னத்தை முடக்கிவிட்டால் தமிழகத்தில் திமுக – ரஜினி இடையே நேரடி போட்டி நிலவும், திமுக மீதான 2ஜி உள்ளிட்ட வழக்குகளை தூசி தட்டினால் ஸ்டாலின் இமேஜை டேமேஜ் ஆக்க முடியும். இதன் மூலம் தமிழகத்தில் ரஜினி தலைமையிலான கூட்டணியை கரைசேர்க்க முடியும் என்று பாஜக மேலிடம் கணக்கு போடலாம் என்கிறார்கள்.

இதனால் தான் முன்கூட்டியே பாஜகவுடன் கூட்டணியை எடப்பாடி பழனிசாமி உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் பாஜக பிடிகொடுக்காமல் இருக்கிறது. இதே போல் அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டாலும் பாஜக கூட்டணிக்கான முதலமைச்சர் வேட்பாளராக அவரை ஏற்கவில்லை. இதே போல் பாமக, தேமுதிகவும் கூட முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் எடப்பாடியை தள்ளியே வைத்துள்ளனர். இதனை எல்லாம் கூட்டி கழித்து பார்த்தால் அதிமுக என்பதை தாண்டி பாஜகவிற்கு தமிழகத்தில் வேறு ஒரு வியூகம் இருப்பது தெரியவருகிறது.

அந்த வகையில் ஓபிஎஸ் ரஜினியை வெளிப்படையாக ஆதரித்திருப்பதன் மூலம் அவர் ரஜினி பக்கம் சாய வாய்ப்புகள் அதிகம். எனவே ரஜினிக்கு உதவும் வகையில் மறுபடியும் அதிமுகவை இரண்டாக உடைத்து இரட்டை இலை சின்னத்தை முடக்கி தேர்தலில் அதிமுக என்கிற கட்சியே இல்லாத நிலையை உருவாக்கும் சாத்தியங்கள் உள்ளன. இதனை எல்லாம் எடப்பாடி சமாளிப்பாரா? அல்லது கழட்டிவிடப்படுவாரா என்பது போகப் போகத்தான் தெரியும்.