ரஜினியின் இந்த பயங்கர பிஸி ஷெடியூலால் இப்போது கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை எனத் தெளிவாக தெரிகிறது,  உற்சாகமாக இருந்த ரசிகர்கள் டல்லாகிப் போனதால், திமுக அதிமுக என பல கட்சிகளுக்கு தாவி வருகின்றனர். இதன் முதல்கட்டமாக  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உடைந்தது ரஜினி மக்கள் மன்றம்.

ரஜினி மக்கள் மன்ற முக்கிய நிர்வாகிகள் சுமார் 350 பேருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை திமுகவில் இணைந்த மதியழகன், வரும் 23ம் தேதி கிருஷ்ணகிரியில் பிரமாண்டமாக நடைபெறும் சிறப்பு கூட்டத்தில் 25 ஆயிரம் பேரை திமுகவில் இணையவுள்ளதாக அதிகாரப்போர்வமாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்,  அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த “ரஜினி மக்கள் மன்றத்தின்” மாவட்டச் செயலாளர் டி.மதியழகன் தலைமையில், மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் எம்.ரஜினிகுமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப் அணிச் செயலாளர் எம்.கேவராஜ், மாவட்ட துணைச் செயலாளர் இ.ஜெகவீரபாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.டி.மகேந்திரன், கே.வி.பாஸ்கரன், மாவட்ட வர்த்தகர் அணிச் செயலாளர் எஸ்.ராஜா, மாவட்ட விவசாய அணிச் செயலாளர் எஸ்.பெரியசாமி, எஸ். ஜெயராஜ் உள்ளிட்ட 350க்கும் மேற்பட்ட கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மற்றும் அனைத்து ஒன்றிய, நகர, பேரூர் ரஜினி மன்ற நிர்வாகிகள் - அணி நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

மேலும், அஞ்செட்டி, ஊத்தங்கரை, காவேரிப்பட்டினம், கிருஷ்ணகிரி, கெலமங்கலம், சூளகிரி கிழக்கு, சூளகிரி மேற்கு, தளி, பர்கூர், மத்தூர், வேப்பனப்பள்ளி ஆகிய ஒன்றிய செயலாளர் மற்றும் அணி நிர்வாகிகள் - கிருஷ்ணகிரி நகரச் செயலாளர் மற்றும் அணி நிர்வாகிகள் பர்கூர், காவேரிப்பட்டணம், நாகரசம்பட்டி, ஊத்தங்கரை, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை ஆகிய பேரூரைச் சேர்ந்த செயலாளர் மற்றும் அணி நிர்வாகிகள் 500க்கும் மேற்ப்பட்டோர் இணைந்தனர்.

இந்நிகழ்வின்போது, முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு,  க.பொன்முடி, எம்.எல்.ஏ., கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் டி.செங்குட்டுவன்,  ஆகியோர் உடனிருந்தனர்.

கடந்த சில மாதங்களாக தினகரன் கட்சியிலிருக்கும் முக்கிய புள்ளிகளை தட்டித் தூக்கிவந்த திமுக, தற்போது ரஜினி தலையில் கை வைத்துள்ளது, அதுவும் ரஜினியின் சொந்த மாவட்டமான  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தமாக திமுகவிற்கு வாரி போட்டுள்ளது. தமிழகத்தில் முதலில் ரஜினி மக்கள் மன்றம் உடையும் மாவட்டம் கிருஷ்ணகிரி தான். இதனால் ரஜினியின் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.