ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை அன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கு முன்னதாக மு.க.அழகிரி தனது அரசியல் நிலைப்பாட்டையும், ரஜினி தனது அரசியல் கட்சியையும் அறிவிக்க உள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை அடுத்து ஆட்சி அமைக்கப்போவது தாங்கள் தான் என்பதில் திமுக மிகவும் தீர்க்கமாக உள்ளது. அதே சமயம் திமுக மறுபடியும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் ஒரு தரப்பு மிகவும் உறுதியாக உள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு திமுக எப்படி வியூகம் வகுத்து வருகிறதோ அதே போல் திமுகவை ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்று மற்றொரு தரப்பு வியூகம் வகுத்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 2016ம் ஆண்டு முதல் ஆடிட்டர் குருமூர்த்தி அரசியல் களத்தில் மிக முக்கிய பங்காற்றி வருகிறார். இவரது ஆர்வம் தான் ரஜினியை அரசியல் களத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவே பேச்சுகள் அடிபடுகின்றன.

 

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா என மத்தியில் ஆளும் பாஜகவின் முக்கிய சக்திகளை எந்த நேரத்திலும் தொடர்பு கொண்டு பேசும் உரிமை ஆடிட்டர் குருமூர்த்திக்கு உண்டு. இவரது முக்கிய அஜென்டாவே திமுக மறுபடியும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது தான். ரஜினி தலைமையில் உருவாகும் கூட்டணியில் அதிமுகவை இணைக்க வேண்டும் என்று இவர் காய் நகர்த்தி வருகிறார். இது தொடர்பான சில உறுதிமொழிகள் கிடைத்ததை தொடர்ந்தே ரஜினி அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் தற்போதைய சூழலில் திமுக – அதிமுக இடையே தான் நேரடி போட்டி. பொதுவான வாக்காளர்களை யார் கவர்கிறார்களோ அவர்கள் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும். காலம் காலமாக திமுக, அதிமுகவிற்கு வாக்களிப்பவர்களின் சாய்ஸ் எப்போதுமே அந்த இரண்டு கட்சிகளுக்குத்தான். இவர்கள் தவிர மாற்றத்தை எதிர்பார்ப்பவர்கள் என்று ஒரு பிரிவு உண்டு. இவர்கள் வழக்கமாகவே ஆளும் கட்சியை புறக்கணித்துவிட்டு எதிர்கட்சிக்கு வாக்களிக்கும் தன்மை கொண்டவர்கள். இவர்களைத்தான் ரஜினி கவர்ந்து இழுப்பார் என்பது ஆடிட்டர குருமூர்த்தியின் கணக்கு.

திமுகவிற்கு செல்ல வேண்டிய இந்த வாக்குகளை கவர்ந்துவிட்டால் எளிதாக அதிமுக வெற்றி பெற்றுவிடும். திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்துவிட்டால் பாஜகவை இங்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் கால் பதிக்க வைத்துவிடலாம். இப்படி எல்லாம் போடப்படும் திட்டமாகவே ரஜினி அரசியல் களத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இதே போன்று கடந்த 2014ம் ஆண்டு முதல் மு.க.அழகிரி அரசியல் களத்தில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளார். இதற்கு காரணம் தனது சகோதரர் மு.க.ஸ்டாலின் என்று அவர் நம்புகிறார்.

எனவே எப்படியும் ஸ்டாலினை பழிவாங்க வேண்டும் என்று அழகிரி ஆறு வருடங்களாக காத்திருக்கிறார். அதற்கான தருணம் தற்போது வந்துவிட்டதாகவும் அழகிரி நம்புகிறார். தென்மாவட்டங்களில் திமுகவின் மைனஸ் மற்றும் பிளஸ் அழகிரிக்கு அத்துப்படி. அதே போல் திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் முதல் கிளைக்கழக செயலாளர்கள் வரை அழகிரியின் ரேடாரில் இருந்தவர்கள். எனவே தேர்தல் சமயத்தில் அவர்களுக்கு எதிரான வேலைகளில் அழகிரியால் ஜரூராக ஈடுபட முடியும்.

இதனை எல்லாம் கருத்தில் கொண்ட தான் அழகிரியை பாஜகவில் சேர்க்க அந்த கட்சி முயற்சி செய்தது. ஆனால் தனக்கு தற்போது அரசியல் ஆசை இல்லை என்பதை தெளிவாக எடுத்துக்கூறிவிட்டார் அழகிரி. தன்னுடைய ஒரே நோக்கம் ஸ்டாலினை முதலமைச்சர் ஆகவிடாமல் தடுப்பது தான் என்றும் அழகிரி பாஜகவில் இருந்து தன்னிடம் பேசியவர்களிடம் கூறிவிட்டார். இந்த நிலையில் தான் தனது ஆதரவாளர்களை அழைத்து வரும் 3ந் தேதி ஆலோசனை கூட்டம் நடத்துகிறார் மு.க.அழகிரி. இந்த கூட்டத்தில் தனது சட்டமன்ற தேர்தல் நிலைப்பாட்டையும அவர் அறிவிக்க உள்ளார். அத்தோடு ரஜினியையும் சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் அழகிரி.

வரும் 31ந் தேதி அரசியல் கட்சியை துவங்கும் நாளை அறிவிக்க உள்ள ரஜினியின் நோக்கமும் திமுக ஆட்சிக்கு வரக்’கூடாது என்பது தான். இதே போல் மு.க.அழகிரியின் வியூகமும் ஸ்டாலினை முதலமைச்சராகவிடாமல் தடுப்பது தான். எனவே வரும் 31 மற்றும் 3ந் தேதி தமிழக அரசியல் களத்தில் திமுகவிற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையிலான இரண்டு சம்பவங்கள் நடைபெறப்போது என்பது மட்டும் உண்மை.