ரஜினிகாந்த் ஏதாவது சொல்லப்போக, அது பெரும் சர்ச்சையாகி, பரபரப்பை தேடி அலையும் பத்திரிக்கை மற்றும் மீடியாக்களுக்கு வாய் நிறைய சர்க்கரைப் பொங்கலை போடுவது வழக்கமான விஷயம்தான். ஆனால் கடந்த பொங்கல் சமயத்தில் ரஜினிகாந்த் கொளுத்தியிருக்கும் ’பெரியார் ஊர்வலத்தில் ராமர் படத்துக்கு செருப்படி’ எனும் பட்டாசு மிக பயங்கரமாக வெடித்துக் கொண்டிருக்கிறது. 

அதுவும் லேட்டஸ்டாக ‘ரஜினியின் டார்கெட் பெரியாரில்லை. அதன் பின்னணியில் வேறோரு பிரளயத்துக்கு, பிரச்னைக்கு திட்டமிடப்பட்டு இருந்திருக்கிறது!’ என்று ஒரு புதிய பூதம் கிளம்பியுள்ளது. அதாவது 1971ல் சேலத்தில் பெரியார் தலைமையில் நடந்த ராமலீலா எதிர்ப்பு ஊர்வலத்தில்தான் இந்த செருப்படி பிரச்னை நடந்திருக்கிறது. அப்போது அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் கந்தசாமி. திராவிடர் கழக பகுத்தறிவு ஆசிரியர் அணியை சேர்ந்தவர்தான் இந்த புதிய பூகம்பம் பற்றி அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். 

அரசியல் புலனாய்வு பிரபல வாரம் இருமுறை புத்தகம் ஒன்றில் பேசியிருக்கும் அவர் ”மாநாட்டில் கலந்து கொண்ட போது எனக்கு 24 வயது. மாநாட்டில் ராமர், சீதை படங்கள் இருந்தது உண்மை. சேலம் பட்டைகோவில் மணி என்பவர்தான் அந்தப் படங்களை எல்லாம் வரைந்து கொடுத்தார். ராமரை வாலி மறைந்து நின்று தாக்குவது மாதிரியான படம் இருந்தது. சிவன், திருமாலை இணைத்து கேலி செய்வது மாதிரி, ஆம்பளையும் - ஆம்பளையும் இணைந்தால் குழந்தை பிறக்குமா? என்பது போன்ற படங்கள் இடம்பெற்றிருந்தது. ஊர்வலம் நடந்தபோது ரோட்டில் நின்ற ஜன சங்கத்தினர் ‘ராமரை அவமதிக்கலாமா?’ என்று எங்கள் மீது செருப்பை வீசினர். ஆனால் அது ராமர் படத்தின் முன் விழுந்தது. உடனே திருச்சி செல்வேந்திரன் அதை எடுத்து ராமர் படத்தை அடித்தார். 

பின் பலரும் அடித்தார்கள் ஆர்வமிகுதியில். ஊர்வலம் முடிந்த பின் தொண்டர்களைக் கூப்பிட்ட பெரியார் ‘நம்ம கூட்டத்தில் இப்படி அநாகரிகமாக நடக்கலாமா?’ என்று கடிந்து கொண்டார். அப்போது பெரியார் மிகவும் டென்ஷனாக இருந்தார். காரணம், இந்த ஊர்வலத்திற்கு வீரமணியும், மணியம்மையும் வரவில்லை. யாரிடமும் சொல்லாமல் சென்னைக்குப் போய்விட்டார்கள். பெரியாரிடமும் சொல்லாமல் அவர்கள் ஏன் சென்னைக்குப் போனார்கள்? கூட்டத்தை அவர்கள் புறக்கணித்ததன் பின்னணி என்ன? என்பது இன்றுவரை திராவிடத் தொண்டர்களுக்கும் பிடிபடாத மர்மம்தான். 

இதை பிரச்னையாக்கவே ரஜினிக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்.” என்று சொல்லியிருக்கிறார். கந்தசாமி போட்டு உடைத்திருக்கும் இந்த விவகாரம் இப்போது புது ரூட்டில் கிளம்ப துவங்கியிருக்கிறது. இந்த பிரச்னை இப்போதைக்கு ஓயவே ஓயாது! என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.