குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு நடிகர் ரஜினி வெளிப்படையாக ஆதரவு அளித்தது, ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள இஸ்லாமிய நிர்வாகிகளே குமுறினர். இஸ்லாமியர்களிடம் ரஜினியைப் பற்றி பேசினாலே, அவர்களை எதிர்கொள்ள முடியாத அளவுக்கு இஸ்லாமிய ரஜினி ரசிகர்கள் தள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதுதொடர்பாக தங்களுடைய ஆதங்கத்தை மேலிடத்துக்கு ரஜினி ரசிகர்கள் வெளிப்படுத்தினர். இந்நிலையில் டெல்லி கலவரத்துக்கு அமித் ஷா பதவி வகித்துவரும் உள்துறை அமைச்சகத்தின் தோல்வியே காரணம் என்று கண்டனம் தெரிவித்தார் ரஜினி.


ரஜினியின் இந்த அறிவிப்பால் அவருடைய ரசிகர்கள் திருப்தி அடைந்தனர். குறிப்பாக இஸ்லாமிய நிர்வாகிகளும் ரசிகர்களும் திருப்தி அடைந்துள்ளனர். இதற்கிடையே இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், இஸ்லாமிய மதகுருமார்கள் நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்து பேசிவருகிறார்கள். சிஏஏ-க்கு ரஜினி ஆதரவு தெரிவித்த நிலையில், இஸ்லாமியர்கள்  தங்கள் நிலைப்பாடு குறித்து ரஜினியோடு பேசிவருகிறார்கள். இந்தச் சந்திப்பால் ரஜினி ரசிகர்களின் உற்சாகம் இன்னும் அதிகரித்துள்ளது. இஸ்லாமிய மதகுருமார்கள் ரஜினியைச் சந்தித்தவேளையில், நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார். 
அதில், “இன்று தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை நிர்வாகிகளை சந்தித்து, அவர்கள் தரப்பு ஆலோசனைகளைச் கேட்டறிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எப்போதும் அன்பும் ஒற்றுமையும் அமைதியுமே ஒரு நாட்டின் பிரதான நோக்காமாக இருக்க வேண்டும் என்ற அவர்களது கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன்” என்று ரஜினி பதிவிட்டுள்ளார்.
தேர்தலை எதிர்கொள்ள அனைத்து பிரிவினரின் ஆதரவும் தேவை என்பதால், இஸ்லாமியர்களுடன் நல்ல உறவை பேணும் வகையில் அவர்களைச் சந்தித்து ரஜினி பேசிவருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் மயிலாப்பூர் அறிவுஜீவி ஒருவரின் ஆலோசனையின் பேரிலேயே ரஜினி இஸ்லாமியர்களைச் சந்தித்து பேசிவருவதாகவும் தகவல்கள் சுற்றி வரத்தொடங்கியுள்ளன.