தமிழக அரசியலை புரட்டிப்போடபோகும் மே 24-ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுக்கு பிறகு அரசியல் பிரவேசம் குறித்து முக்கிய அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிடுவார் என அவருடைய சகோதரர் சத்யநாராயணராவ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வருகிற 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து மே 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. இந்நிலையில் தேர்தல் முடிவை அரசியல் கட்சிகள் ஆவலோடு எதிர்பார்த்து வழிமேல் விழிவைத்து காத்துக்கொண்டிருக்கின்றன.

 

இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக அரசியலுக்கு வருவதாக கூறிய ரஜினி, தனது அரசியல் ஆன்மிக அரசியல் என்று கூறினார். தொடர்ந்து விரைவில் கட்சி பெயரை அறிவித்து தமிழக தேர்தல் களத்தை அதிரவைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேரம் வரட்டும் காலம் வரட்டும் என்று இழுத்தடித்து வந்தார். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த போது நமது இலக்கு மக்களவை தேர்தல் அல்ல சட்டமன்ற தேர்தல் என்று கூறி ஜகா வாங்கினார். இறுதியில் ரஜினி மீது வெறுப்பு ஏற்பட்டு பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். மறுபுறம் ரஜினி கட்சி தொடங்கமாட்டார் படம் திரையிடும் போது மட்டும் அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவிக்கிறார் என்ற விமர்சனங்களும் எழுந்தன.

இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவார். மே 24-ம் தேதி தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, அவர் தனது அரசியல் பிரவேசம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடுவார். ரஜினியின் ரசிகர்கள் அவரது பெற்றோருக்காக கட்டியிருக்கும் நினைவு மண்டப திறப்பு விழாவில் கலந்துகொள்ள ரஜினி வருவார். அப்போது ரசிகர்களை சந்தித்து பேசுவார்" என்று தெரிவித்துள்ளார்.