அரசியல் கட்சி விரைவில் உதயமாக உள்ள நிலையில் மாவட்டங்களில் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த என்னென்ன தேவை என்று மாவட்டச் செயலாளர்களை நேரில் அழைத்து மக்கள் மன்ற தலைமை நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர்.

வரும் 31ந் தேதி ரஜினி எப்போது கட்சி ஆரம்பிக்க உள்ளார் என்கிற தேதி வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து ஜனவரி மாத மத்தியில் ரஜினி தனது கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை வெளியிடுவார். இதற்கிடையே ஏற்கனவே ஒரு அரசியல் கட்சிக்கு இணையான கட்டமைப்பு ரஜினி ரசிகர் மன்றம் வைத்துள்ளது. மாவட்ட அமைப்புகள் தொடங்கி, மாநகர, நகர, ஒன்றிய, கிளை என கிராமங்கள் வரை ரஜினி ரசிகர் மன்றத்திற்குஅமைப்புகள் உள்ளன. எனவே இவற்றை அப்படியே கட்சியாக மாற்றுவது என்பது ரஜினிக்கு எளிதான வேலை.

அதே சமயம் இதுநாள் வரை ரசிகர் மன்றமாக மட்டுமே செயல்பட்டு வந்த இந்த அமைப்புகள் கட்சியாக மாற கட்டமைப்பில் சில மாற்றங்கள் செய்யவேண்டியுள்ளது. மேலும் புதிதாக நிர்வாகிகளை நியமிக்க வேண்டியுள்ளது. பெரிய மாவட்டங்களைஇரண்டாக, மூன்றாக ஏன் நான்காக கூட பிரிக்க வேண்டியுள்ளது. இதே ஒன்றியங்களையும் கூட பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை போன்ற பெரிய நகரங்களில் பகுதிச் செயலாளர்கள் பொறுப்புகளும் உருவாக்கப்பட உள்ளன.

இப்படி புதிய கட்சி உருவாக்கத்தில் தலைமை தனக்குள்ள பணியை செய்து வரும் அதே வேளையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, புதிய அணிகள் அமைப்பு என்று மாவட்ட அளவில் ஏராளமான பணிகள் உள்ளன. இவற்றை எல்லாம் செய்து முடிக்கும் அசைன்மென்ட் ஏற்கனவே மாவட்டச் செயலாளர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்களும் மிக ஆர்வமாக இந்த பணிகளை செய்து வருகின்றனர். அதே சமயம் திமுக, அதிமுகவிற்கு ஈடுகொடுத்து தேர்தல் பணியாற்ற ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு என்று சில தேவைகள் இருக்கும்.

அப்படி என்ன மாதிரியான விஷயங்களை மாவட்ட நிர்வாகிகள் எதிர்பார்க்கிறார்கள் என்று மாவட்டச் செயலாளரை அழைத்து மக்கள் மன்றத்தின் தலைமை நிர்வாகி சுதாகர், மக்கள் மன்ற மேற்பார்வையாளர் தமிழருவி மணியன், மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் அர்ஜூன மூர்த்தி ஆகியோர் ஆலோசித்து வருகின்றனர். வரக்கூடிய மாவட்டச் செயலாளர்களிடம் அங்குள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை, உறுப்பினர்களை அதிகரிக்க என்ன செய்ய உள்ளீர்கள், தலைமையிடம் இருந்து உங்கள எதிர்பார்ப்பு என்ன என்பன போன்ற கேள்விகள் எழுப்பபட்டு அதனை குறிப்பெடுத்துக் கொள்கிறார்கள்.

பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் நன்கொடை வசூலிக்க அனுமதிக்க வேண்டும், தேர்தர் நிதி திரட்ட உத்தரவிட வேண்டும், மேலும் நிர்வாகிகளை ஒருங்கிணைக்க நிதி உதவி தேவை என்று பண ரீதியான தேவைகளையே அதிகம் கூறி வருவதாக சொல்கிறார்கள். அத்துடன் தகவல் தொழில்நுட்ப அணியை விரைவாக அமைத்து நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்றும் மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதன் அடிப்படையில் விரைவில் மாவட்டச் செயலாளர்களுக்கு ஸ்பெசல் பண்ட் தலைமையிடம் இருந்து அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம்.