நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், வரும் ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும், டிசம்பர் 31-ம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் ட்விட்டரில் அறிவித்தார் ரஜினி. மேலும் மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல என்றும் ட்விட்டரில் கூறியிருந்தார். பின்னர் போயஸ்காரடனில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அர்ஜூனா மூர்த்தியையும் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் அறிவித்தார்.

 
 இந்நிலையில் சென்னையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “எங்களுக்கும் வயதாகிறது. அதேபோல ரஜினிகாந்துக்கும் வயதாகி விட்டது. ஆன்மீக அரசியல் பற்றி அவர் தெளிவடைய வேண்டும். தெளிவான பதிலை அவர் தெரிவித்த பிறகு என்னுடைய கருத்தை தெரிவிக்கிறேன். தமிழகத்தில் ஆன்மீகம் எடுபடும். ஆனால் ஆன்மீக அரசியல் எடுபடாது. ஆன்மீக அரசியல் என்றைக்கும் அதிகாரத்தை நோக்கி செல்லாது” என்று தெரிவித்தார்.