சினிமாவெல்லாம் பிச்சை எடுக்கணும் பாஸ், இப்போது தமிழக அரசியலில் நடந்து கொண்டிருக்கும் அதிரடி திருப்பங்கள் மற்றும் அசகாய ஆக்‌ஷன் ஸீன்களிடம். அந்தளவுக்கு குறுக்கு மறுக்காக ரூட் போட்டு, ச்சும்மா குப்புற தள்ளி குளிர் காய்கிறார்கள் தங்களுக்கான அரசியல் எதிரிகளை. யார் தெரியுமா? ஸ்டாலினும், எடப்பாடியாரும்தான். 
அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இருவருக்குள்ளும் எழுதப்படாத ஒரு ஒப்பந்தம் உண்டு. அது ‘ஒன்று நீ ஆளு இல்லேன்னா நான் ஆளுவேன். நம்ம ரெண்டு பேரையும் எவனும் ஆள வரக்கூடாது’ என்பதே அது. இது கருணாநிதி - எம்.ஜி.ஆர், கருணாநிதி - ஜெயலலிதா காலங்களில் சிறப்பாக நடந்தேறி, இதோ இன்று எடப்பாடியார் - ஸ்டாலின் காலங்களிலும் தொடர்கிறது. 


அந்த வகையில் சமீபத்தில் இருவரும் கைகோர்த்திருப்பது கமல், ரஜினியின் ‘இணைந்த அரசியலுக்கு’ எதிராகத்தான். ’தமிழக நலனுக்காக தேவைப்பட்டால் இணைந்து அரசியல் செய்வோம்.’ என்று இருவரும் ஒரே நாளில் அறிவித்ததன் விளைவு, உள்ளூர பொங்கி எழுந்துவிட்டனர் ஸ்டாலினும், எடப்பாடியும். இந்த எதிரிச் செடியை, முளையிலேயே கிள்ளி எறிய முடிவெடுத்தவர்கள், தோதான அரசியல் சாணக்கியர்கள், ஒற்றர்கள், ஏஜெண்டுகள் மூலமாக ரகசிய பேச்சுவார்த்தையை நடத்தி, அதன் முடிவாக சில சித்து விளையாட்டுகளை ஆடினர். அதில் ஹைலைட் மூவ் என்னவென்றால், கமல் மற்றும் ரஜினி என இருவரின்  முகாமுக்குள்ளேயே தங்களுக்கு தோதாக ஒரு ஸ்லிப்பர் செல்லை பிடித்து, அவர்களை தூண்டிவிட்டு, இந்த திடீர் கூட்டணிக்கு குண்டு வைக்கும் வகையில் பேச வைத்ததுதான். பக்காவான கட்சியாக ஃபார்ம் ஆகிவிட்ட கமலின் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் மாநில நிர்வாகியான ஸ்ரீரிப்ரியா பேசிய ‘கமல், ரஜினி இருவரும் மக்களின் நலனுக்காக ஒன்று சேர்ந்து அரசியல் பண்ணுவர். ஆனால் முதல்வராக வர வேண்டியது கமல்தான்! இதுவே என் விருப்பம்.’ என்று கூறியது இரண்டு கூடாரத்தினுள்ளும் பெரும் கலவரத்தை கிளறியது. 


இதற்குப் பதிலடியாக, இன்னும் கட்சியாக ஃபார்ம் ஆகாத நிலையில், ரஜினி தரப்பின் மவுத் பீஸாக இயக்குநர் ப்ரவீன் காந்தி ‘என்னதான் சினிமாவில் ரஜினிக்கு முன்பாக வந்தாலும் கூட,   ரசிகர்களின் செல்வாக்கில் ரஜினிதான் முன்னாடி நிற்கிறார். அதேபோல் அரசியலிலும் ரஜினிக்கு முன்பே கமல் வந்துவிட்டாலும் கூட மக்கள் செல்வாக்கில் கமலை விட ரஜினியே முன்னிலையில் இருப்பார். எனவே முதல்வராக வேண்டியது ரஜினிதான்.’ என்று போட்டுத் தாக்கினார். 
இந்த இருவரின் பேச்சுக்களாலும் ‘ரஜினி - கமலின் இணைந்த அரசியல்’ எனும் கான்செப்ட்டுக்கு வேட்டு வைக்கப்பட்டுள்ளது. யெஸ்! சேர்ந்து அரசியல் பண்ணுவதெல்லாம் சத்தியமாக வேலைக்கு ஆகாது! என இரண்டு மெகா ஸ்டார்களின் தரப்பும் முடிவெடுத்துவிட்டதாம் இப்போது. தினகரனின் முகாமுக்குள்ளே தங்களின் ஸ்லீப்பர் செல்களை வைத்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எனும் கட்சியை காணாமல் போக வைத்தது போல், ரஜினி மற்றும் கமல் கூடாரத்தினுள் தங்களுக்கு தோதான ஆட்களைப் பிடித்து அடுத்த நொடியே ‘இணைந்த அரசியல்’ முயற்சிக்கு வெட்டு வைத்து சாதித்துள்ளனர் எடப்பாடியாரும், ஸ்டாலினும். இவர்களின் இந்த முயற்சிக்கு துணை போனவர்களை ‘ஸ்டார் கூலிப்படை’ என்று வர்ணிக்கின்றனர்.