இதுகுறித்து தஞ்சையில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ’’உலக பொதுமறை தந்த திருவள்ளுவரை காவியடித்து தன்வயப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. தமிழர்கள் ஒரு பண்பட்ட நாகரீகத்தை அடைந்து விட்டார்கள். அதனால், வீதியில் இறங்கி போராடுவதற்கு வெட்கப்படுகிறார்கள். அதையும் மீறி தமிழர்களை இழிவுப்படுத்தி அவமானப்படுத்தினால் தமிழக மக்கள் வெகுண்டு எழுவார்கள்.

தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்திருப்பது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். எனவே சம்பந்தப்பட்டவர்களை உடனே கைது செய்ய வேண்டும். பா.ஜ.க.வை சேர்ந்த எச். ராஜா திருவள்ளுவரை இந்து புலவர் என்று சொல்கிறார். இந்தியநாடு என்பதும், இந்து என்ற சொல்லும் இங்கே கிடையாது. வள்ளுவரை வைத்து அரசியல் செய்யாதீர்கள். நாட்டில் உள்ள நிலம், வளம் சார்ந்த பிரச்சனைகளை கையில் எடுத்து அரசியல் செய்யுங்கள்.

ச.ம.க. தலைவர் சரத்குமார் அ.தி.மு.க. கூட்டணியில் இருப்பதால் கூட்டணி தர்மத்திற்காக எடப்பாடி பழனிசாமியை ஆளுமை மிக்க தலைவர் என்று கூறியிருக்கிறார். திரையுலகில் சாதித்த ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியிருப்பதை வரவேற்கிறேன். ஆனால் அவரை விட சாதித்தவர்கள் இங்கு இருக்கிறார்கள். கமல் 60 ஆண்டு காலம் கலை உலகில் சாதித்துள்ளார். பாரதிராஜா, இளையராஜா போன்றோர்களும் இருக்கிறார்கள்.


ரஜினிகாந்த் மத்திய பா.ஜ.க. அரசின் நண்பர் என்பதால் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியுள்ளது’’ என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.