ரஜினியின் இந்த அரசியில் முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என்றும், தமிழகத்தில் அரசியில் தலைவர் வெற்றிடம் உள்ள நிலையில் ரஜினி அரசியலுக்கு வர இது சரியான தருணம் எனவும்,  வரும் 2021 தேர்தல் தமிழகத்தை ஆன்மீகத்தை நோக்கி இட்டுச் செல்லும் என ரஜினியில் அரசியல் அறிவிப்பு குறித்து  துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குரு மூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.  

ஜனவரியில் கட்சி துவங்கப்படும் என்றும், டிசம்பர் 31 இல் அதற்கான தேதி அறிவிப்பு செய்யப்படும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.  கடந்த 2017ஆம் ஆண்டு " நான் அரசியலுக்கு வருவது உறுதி"  என்று கூறினார் ரஜினி,  நீண்ட நாட்களாக ரஜினியின் அரசியல் வருகைக்காக காத்திருந்த ரசிகர்கள் வயிற்றில் அந்த அறிவிப்பு பால் வார்ப்பதாக இருந்தது, அதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் சட்டமன்றத் தேர்தலே தனது பிரதான இலக்கு எனவும், எம்ஜிஆர் ஆட்சியை தன்னால் தர முடியும் என்றும் கூறி அதிரடி காட்டினார். இதனைத்தொடர்ந்து ரஜினிகாந்தின் அரசியல் கட்சி எப்போது தொடங்கும் என அவரது  ரசிகர்கள் வழிமேல் விழி வைத்து தவமாய் காத்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே ரஜினி அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை எனவும், கொரோனா தொற்று காரணமாக அவர் அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டார் எனவும் தகவல்கள் வெளியானது. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் தள்ளப்பட்டனர். 

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் 38 பேருக்கும் சென்னை வரும்படி ரஜினிகாந்த் அழைப்பு விடுத்தார்.  அவரின் இந்த முடிவு தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கியது. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ரஜினி தலைமையில் நடைபெற்றது. தமிழக அரசியல் நிலவரம், கொரோனா களப்பணி முதலியவை குறித்து நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் கேட்டிருந்தார்.  பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எனது முடிவை அறிவிப்பேன் என்றார்.  இதனால் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு பற்றிய அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம் என அவரது ரசிகர்கள் காத்திருந்தனர். 

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிரடியாக,  ஜனவரியில் கட்சி துவக்கம், டிசம்பர் 31-ல் தேதி அறிவிப்பு என பதிவிட்டுள்ளார். மேலும், மாற்றுவோம்... எல்லாத்தையும் மாற்றுவோம்... இப்போ இல்லன்னா..  எப்பவும் இல்ல.  வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான நாணயமான வெளிப்படையான ஊழலற்ற ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியலை உருவாக்குவது நிச்சயம். அற்புதம்... அதிசயம் நிகழும்..!!!  என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும் அளவற்ற உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த் அரசியல் வருகை கானல் நீராகி விட்டது என கூறி வந்தவர்களுக்கு அவரின் இந்த முடிவு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் இது குறித்து பல்வேறு அரசியில் கட்சி தலைவர்கள் மற்றும் அரசியல் நோக்ககர்கள் கருத்து கூறி வருகின்றனர். ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என பல ஆண்டுகலாக அவரை வலியுறுத்தி வந்தவர்களில் முதலிலும், முன்னணியிலும் இருப்பவர் ஆடிட்டர் குருமூர்த்தி ஆவார். அவர் ரஜினியின் அரசியல் வருகை குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- தமிழக மக்கள் நீண்ட காலமாக ரஜினியின் வருகைக்காக காத்திருக்கின்றனர். ரஜினியில் இந்த அறிவிப்பு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு, தலைவர்களுக்கு வெற்றிடம் உள்ள நிலையில் ரஜினி அரசியலுக்கு வர இது சரியான தருணம், இந்த முடிவு தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு என்றாலும் காலத்திற்கு ஏற்ற முடிவு, Late But Latest எனவும், வரும் 2021 சட்டமன்ற தேர்தல் தமிழகத்தை ஆன்மீகத்தை நோக்கி பயணிக்க வைக்கும் எனவும், ரஜனியின் அரசியல் முடிவுக்கு எனது வாழ்த்துக்கள் எனவும் பதிவிட்டுள்ளார். 

மேலும் இது குறித்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், ஆன்மீகம் என்பதும், அரசியல் என்பதும் வேறுவேறு ஆனால் இரண்டையும் குழப்புகிறார் ரஜினி என தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து தெரிவித்துள்ள இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத், ரஜினியின் ஆன்மீக அரசியல் திராவிட அரசியலுக்கு மாற்றாக இருக்கும், அவர் அரசியலுக்கு வர பல தியாகங்களை செய்துள்ளார் என தெரிவித்துள்ளார்.  ரஜினி அரசியல் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் நோக்ககர், மற்றும் விமர்சகருமான ரவீந்திரன் துரைசாமி , எம்ஜிஆருக்கு இணையான தலைவர் ரஜினி காந்த், எம்ஜிஆரைப் போல 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.  இப்படி பலரும் பல வகையில் தங்களது கருத்துக்களை வெளிபடுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.