வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வகையில் நடிகர் ரஜினி தனது ரசிகர் மன்றத்தை தயார் படுத்தும் வேலையில் இறங்கியுள்ளது அவரது நடவடிக்கைள் மூலம் தெரியவந்துள்ளது. அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துவிட்டு அடுத்தடுத்த படப்பிடிப்புகளுக்கு சென்று வரும் ரஜினி பார்ட் டைம் அரசியல்வாதி போல் செயல்பட்டு வருகிறார். ஆனால் அவரது மக்கள் மன்ற நிர்வாகிகளின் செயல்பாடுகள் மட்டும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகத்தீவிரமாக இருக்கிறது. டார்ஜிலிங்கில் கார்த்தி சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ள ரஜினி மீண்டும் மன்ற நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

நிர்வாகிகள் நியமனத்திற்கு பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலும் சேர்க்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை, பூத் கமிட்டிகளின் எண்ணிக்கை ரஜினியின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் மிகவும் பின்தங்கியிருந்த மாவட்ட நிர்வாகிகளை உடனடியாக மாற்றுமாறு ரஜினி உத்தரவிட்டுள்ளார். ரஜினியின் இந்த உத்தரவு தலைமை மன்ற நிர்வாகியான சுதாகருக்கே ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் தவறு செய்யும் நிர்வாகிகளுக்கு கூட ரஜினி இரண்டு மூன்று முறை வாய்ப்பு கொடுப்பார். ஆனால் பணிகளில் மந்தம் என்ற காரணத்திற்காக மாவட்ட தலைவரையே ரஜினி மாற்ற உத்தரவிட்டது அவருக்கே அதிர்ச்சியை கொடுத்தது. இதன்படி தினந்தோறும் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளாக மாற்றப்பட்டு வருகின்றனர். இவற்றில் உச்சமாக விழுப்புரம் மாவட்ட தலைவரே மாற்றப்பட்டார்.

 மேலும் புதுச்சேரியில் மாநில அளவிலான நிர்வாகிகளை ரஜினி அதிரடியாக மாற்றி அறிவித்தார். இதனிடையே சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் மக்கள் மன்றத்தில் மகளிர் அணி,வழக்கறிஞர் அணி, விவசாய அணி, மீனவர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த ரஜினி, தானும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் மகளிர் அணியினருக்கு சில ஆலோசனைகளையும் அவர் வழங்கிவிட்டு சென்றார். மேலும் நடிகர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கலைஞர் இரங்கல் கூட்டத்தில் கூட அரசியல் பேசியது ரஜினியின் தற்போதைய மனநிலையை எடுத்துரைக்கும் வகையில் இருந்தது. 

இதன் தொடர்ச்சியாக தனக்கு நெருக்கமானவர்களை அழைத்து தமிழக அரசியல் சூழல் குறித்தும் ரஜினி பேசியுள்ளார். இவை அனைத்துமே நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி ரஜினி காய் நகர்த்துவதையே காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக கட்சி ஆரம்பிக்கவில்லை என்றாலும் கூட, மக்கள் மன்றத்தின் மூலமாகவே நாடாளுமன்ற தேர்தலில் இறங்கி அரசியலில் ஆழம் பார்த்துவிடும் முடிவில் ரஜினி இருப்பதாகவே கூறப்படுகிறது. அதனால் தான் முன் எப்போதும் இல்லத வகையில் அவர் மன்ற பணிகளில் தீவிரம் காட்டுவதாக சொல்லப்படுகிறது.