’’எங்கு பிறந்தாலும் தமிழன் தமிழனே, எங்கு வாழ்ந்தாலும் அயலான் அயலானே. ஒருவர் ஏன் இனம்மாறுகிறார் அதில் இருந்தே தொடங்குகிறது ஏமாற்றம்" ரஜினி பற்றிய சீமானின் அடிப்படை கருத்து இதுதான். "ஒரு மலையாளிக்கு தெரிகிறது முல்லைப்பெரியாறு பிரச்னை வந்தால் உடனே தமிழர்களை அடையாளம் கண்டு அடித்து விரட்டுகிறான். கன்னடருக்கு தெரிகிறது காவிரி நீர் பிரச்னை வந்தால் உடனே தமிழனை விரட்டி அடிக்கிறான். அரசியல் கட்சி தொடங்க 8 கோடி தமிழனில் எவனுக்குமே தகுதியில்லையா, யாருமே யோக்கியன் இல்லையா?" என அவ்வப்போது கொந்தளிக்கிறார் சீமான்.

ஆரம்பத்தில் இருந்தே ரஜினியின் அரசியலை இன ரீதியாகவே சீமான் அணுகி வருகிறார். அரசியல் ரீதியாக கமலுடன் சீமானுக்கு ஒத்துப்போகவில்லை. ஆனாலும், ரஜினி அரசியலால் கமலை கட்டி அணைத்து கொள்கிறார். ’’விஜய் என் தம்பி. என் இனம் சார்ந்தவன். விஜய் வந்து அரசியல் செய்வதென்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். மக்கள் அவருக்கு வாக்கு செலுத்தினால், பாராட்டுவேன்’’என பூரித்துப்போகிறார். சிம்புவைக்கூட சிலாகிக்கிறார் சீமான்.

ஆக மொத்தம், ரஜினியை தவிர வேறு யார் வந்தாலும் அதனை வெறிகொண்டு எதிர்க்காமல் விட்டேத்தியாகி விடுகிறார் சீமான். இது பிரிவினைவாதம் என்றும், மக்களை இனரீதியாக தூண்டிவிட்டு மோதவிடும் போக்கு என்றும் ஒருசிலரால் பார்க்கப்படுகிறது. அது மட்டுமில்லை, ரஜினியை எதிர்த்தால் சீமான் பலமான அரசியல்வாதியாக முதல்வர் ஆகிவிடலாம் என்று எண்ணுகிறார்.

 

இதெற்கெல்லாம் நான் தமிழன்தாண்டா  என தர்பார் படத்தில் டயலாக் பேசி சீமானின் வாயை அடைத்துள்ளார் ரஜினி. தர்பார் படத்தில் ஒரு சீன். ரஜினி டெல்லியில் இருந்து மும்பை கமிஷனராக மாறுதலாகி விமான நிலையத்தில் இருந்து இறங்கி வருவார் ரஜினி. அவரை வரவேற்க காவல்துறை அதிகாரிகள் அங்கு வருவார்கள். அப்போதைய அறிமுகத்தின் போது காவல்துறை அதிகாரிகள் நாங்கள் ரெண்டு பேருமே தமிழ் தான் சார். நான் கள்ளக்குறிச்சி (ஏ.ஆர்.முருகதாஸின் சொந்த ஊர் )என அறிமுகம் செய்து கொள்வார்.

 மற்றொருவர் தனக்கு சொந்த ஊர் சென்னை என கூறுவார். அப்போது ரஜினி, ’’நான் நாச்சிக்குப்பம் கிருஷ்ணகிரி டிஸ்ட்ரிக்’’ எனக்கூறுவார். இந்த டயலாக்கை வெறுமனே கடந்து விட்டுப்போக முடியாது. ரஜினியின் சொந்த ஊர் இந்த நாச்சிக்குப்பம். ரஜினிகாந்த் கர்நாடகத்தில் பிறந்தாலும் அவரது தந்தையின் சொந்த ஊர் இந்த நாச்சிக்குப்பம். அவரது அப்பா ராமோசி ராவ் கெய்க்வாட் நாச்சிக்குப்பத்தில் இருந்து கர்நாடாகா மாநிலத்தில் குடியேறினார். 

ஆனாலும் கடந்த ஐம்பது ஆண்டுகளாக கர்நாடக மாநில எல்லையில் உள்ள நாச்சிக்குப்பத்திற்கு ரஜினி குடும்பம் வந்து செல்கிறது. இந்த கிராமத்தில், ரஜினியின் உறவினா்கள் 50-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். ரஜினி சிறுவனாக இருக்கும் போது நாச்சிக்குப்பத்தில் உள்ள சொந்தக்காரர்கள் வீடுகளுக்கும் அவ்வப்போது வந்து தங்கிச் செல்வதை வாடிக்கையாகவும் வைத்திருந்துள்ளார்.

இனியும் ரஜினியை சீமான் இனரீதியாக அணுகினால், சீண்டினால், விமர்சித்தால் அது எடுபடுமா? இல்லை சீமான் ரஜினி தமிழரல்ல என இனியும் கூறுவாரா?