இனிவரும் காலங்களில் யார் அரசியலுக்கு வந்தாலும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் பெயரை பயன்படுத்தாமல் அரசியல் களம் காண முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

பூந்தமல்லி அருகே உள்ள எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நேற்று எம்.ஜி.ஆர். சிலையை நடிகர் ரஜினிகாந்த் திறந்த வைத்து பேசினார். அரசியலுக்கு யார் வந்தாலும் எம்ஜிஆர் போல இருக்க முடியாது. என்னால் எம்ஜிஆர் ஆக முடியாது. ஆனால் எம்ஜிஆர் கொடுத்த அதே ஆட்சியை என்னாலும் கொடுக்க
முடியும் என்றார்.

தலைவர்கள் என்றால் ஜெயலலிதாவும், கருணாநிதியும் மட்டுமே. ஜெயலலிதா  மறைந்துவிட்டார். கருணாநிதி உடல்நல குறைபாட்டில் உள்ளார். எனவே அந்த இரண்டு தலைவர்கள் இல்லாத காரணத்தால் அந்த தலைவருக்கான வெற்றிடத்தை நிறப்பவே நான் வந்துள்ளேன் என்று கூறினார்.

நடிகர் ரஜினியின் இந்த பேச்சு குறித்து மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், தற்போது ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது. இனிவரும் நாட்களில் யார் அரசியலுக்கு வந்தாலும் புரட்சிதலைவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பெயரை பயன்படுத்தாமல் அரசியல் களம் காணமுடியாது.

தற்போது ரஜினியும் அதைதான் பின்பற்றி வருகிறார். ஆனால் அஇஅதிமுக மட்டும்தான் புரட்சிதலைவர் மற்றும் ஜெயலலிதா அவர்களின்  கட்சி என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்று கூறினார். ரஜினியின் அரசியல் முடிவுக்கும், வருகைக்குப் பிறகு தற்போது இந்த இரண்டு தலைவர்களையும் பாராட்டியுள்ளார். ஆனால் இந்த முயற்சி அனைத்தும் வீண் என்பதை அவர் நிச்சயம் புரிந்துகொள்வார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.