நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், வரும் ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும், டிசம்பர் 31-ம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் ட்விட்டரில் அறிவித்தார் ரஜினி. மேலும் மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல என்றும் ட்விட்டரில் கூறியிருந்தார். பின்னர் போயஸ்காரடனில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அர்ஜூனா மூர்த்தியையும் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் அறிவித்தார்.

 
ரஜினியின் அரசியல் கட்சி தொடங்கும் பின்னணியில் பாஜக இருப்பதாக எதிர்க்கட்சியினர் விமர்சிக்கத் தொடங்கிய நிலையில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், ரஜினி பாஜகவுடன் கூட்டணி சேருவார் என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய ஃபேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என்னுடைய அரசியல் கணிப்பு. ரஜினிகாந்த், பாஜக ,ஓபிஎஸ் ஆகியோருடன் கூட்டணி அமைத்து, அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை முடக்கி எடப்பாடி பழனிச்சாமியை அந்தரத்தில் விட்டுவிடுவார்கள். இதற்கு சசிகலா, டிடிவி தினகரன் என்ன செய்ய போகிறார்கள் என்று கவனிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.