புதிதாக கட்சி துவங்க உள்ள நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் பட்டி தொட்டி எங்கும் கொண்டாடியது தொடர்பான உளவுத்துறை ரிப்போர்ட் மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தி, ஓபிஎஸ் போன்றோரின் நடவடிக்கைகள் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தனது 70வது பிறந்த நாளை கடந்த சனிக்கிழமை அன்று கொண்டாடினார். அன்றைய தினம் காலை முதலே ரஜினி வீட்டிற்கு ஏராளமான ரசிகர்கள் வரத் தொடங்கினர். வழக்கத்திற்கு மாறாக பெண் ரசிகைகள் போயஸ் கார்டனுக்கு வந்ததை உளவுத்துளை உன்னிப்பாக கவனித்தது. அதோடு மட்டும் அல்லாமல் ரஜினி அவர்கள் யாரையும் பார்க்க மறுத்த நிலையிலும் ரசிகர்கள் கலையாமல் அங்கேயே இருந்தது மற்றும் பிஆர்ஓ ரியாஸ் வந்து கைகளை கூப்பி வணங்கிய பிறகே ரசிகர்கள் கலைந்து சென்றனர்.

இதே போல் சென்னை, திருச்சி, கோவை போன்ற பெரிய நகரங்கள் மட்டும் இன்றி சின்ன சின்ன கிராமங்களில் கூட ரஜினி ரசிகர்கள் அவரது பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடியுள்ளனர். சொல்லப்போனால் ரஜினி பிறந்த நாள் கொண்டாட்டம் இல்லாத ஊரே இல்லை என்று சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் ஆக்டிவ் ஆகியுள்ளனர். அதாவது இதுநாள் வரை துருப்பிடித்த என்ஜின் போல் இருந்த ரஜினி ரசிகர் மன்றம் ஒரே நாளில் புல்போர்சில் செயல்பட ஆரம்பித்துள்ளது. இதனை கவனமாக குறிப்பிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நோட் போட்டு அனுப்பியுள்ளது உளவுத்துறை.

ரஜினியை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் அவரது அரசியல் வருகையை அவரது ரசிகர்கள் மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளனர், பிறந்த நாளையே இவ்வளவு விமர்சையாக கொண்டாடுபவர்கள் அரசியல் கட்சி துவங்கும் போது மேலும் எழுச்சி பெறுவார்கள் என்பது தான் உளவுத்துறை ரஜினி குறித்து அண்மையில் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்துள்ள நோட். இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை அதிமுக அரசு மீதான விமர்சனத்தை மிகவும் மென்மையாக மேற்கொண்டு வந்த ஆடிட்டர் குருமூர்த்தி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய பேச்சும் அதிமுக தலைமையை கவலை அடைய வைத்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் போன்றோர் ரஜினியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டு அவருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று குருமூர்த்தி கூறிய கருத்துகள் பாஜக மேலிடத்தின் எதிர்பார்ப்பாக கூட இருக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு யோசிக்கிறது. மேலும் ஓபிஎஸ்சும் ரஜினியுடன் கூட்டணி தொடர்பாக கூறிய கருத்துகள், ரஜினி பிறந்த நாளுக்கு ஒரு நாள் முன்பே கூறிய வாழ்த்து என்பவை போன்றவையும் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு வந்துள்ளது.

முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொண்ட பிறகு அவருடன் இணக்கமாக இருப்பது போல் இருந்த ஓபிஎஸ் திடீரென ரஜினிக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளார். அதாவது ஆடிட்டர் குருமூர்த்தி என்ன பேசுகிறாரோ அதற்கு செயல்வடிவம் கொடுப்பது போல் ஓபிஎஸ்சின் நடவடிக்கைகள் இருக்கின்றன. இதன் மூலம் அதிமுகவில் ரஜினிக்கு ஆதரவாக உள்ளடி வேலைகள் நடக்க வாய்ப்பு இருப்பதாக எடப்பாடி தரப்பு கருதுகிறது. மேலும் கொங்கு மண்டலத்தில் மட்டுமே எடப்பாடிக்கு கட்சியில் நேரடியான ஆதரவு நிலவுகிறது.

வட மாவட்டங்களில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களின் நிலைப்பாடு தான் எடப்பாடியின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும். மத்திய மண்டலம் மற்றும் தெற்கு மண்டலத்தில் அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ பின்னால் எவ்வித தயக்கமும் இன்றி அணிவகுக்க தயாராக இல்லை. கட்சியிலும் ஆட்சியிலும் இருவரும் இருக்கிறார்கள் என்பதால் தான் அவர்கள் பின்னால்இந்த மண்டலத்தில் அதிமுக நிர்வாகிகள் அணிவகுத்துள்ளனர். எனவே இவற்றை எல்லாம் கூட்டி கழித்து பார்த்தால் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னர் சரி செய்ய வேண்டிய எண்ணற்ற விஷயங்கள் அதிமுகவில் இருக்கிறது.