புகழ் பெறுவதற்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று, சொந்த திறமையால் செல்வாக்கு பெறுவது. இன்னொன்று, ஏற்கனவே செல்வாக்கில் இருக்கும் நபரை திட்டித் தீர்த்து, அதில் எழும் விமர்சனங்களின் மூலம் தன்னை புகழ்படுத்திக் கொள்வது. இதில் இரண்டாம் வகையை சேர்ந்தவராக உருவெடுத்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்! என்கிறார்கள் விமர்சகர்கள். 

என்ன விவகாரம்?துக்ளக் பத்திரிக்கையின் விழாவில் பேசிய ரஜினிகாந்த் ‘முரசொலி பத்திரிக்கையை கையில் வைத்திருந்தால் தி.மு.க.காரர். துக்ளக் இதழை கையில் வைத்திருந்தால் அவர் அறிவாளி!’ என்று சொன்னார். இதை அப்படியே ஒரு ஸ்டேட்மெண்டாக எடுத்துக் கொண்டு கடந்து சென்றோர் சிலர். ஆனால், ‘அப்ப முரசொலியை கையில் வெச்சிருக்கிறவன் முட்டாளா?’ என்று தி.மு.க.வினர் ஒவ்வொருவரும் ரஜினிக்கு எதிராக பாய துவங்கியிருக்கின்றனர்.இந்த சூழலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் மகனும், அக்கட்சியின் மாநில இளைஞரணி அமைப்பாளருமான உதயநிதி “முதல்வர்னா முத்தமிழறிஞர்! தலைவர்னா  புரட்சித் தலைவர்! தைரியலெட்சுமின்னா அம்மா! என்று, கால்நூற்றாண்டாக கால் பிடித்து காலம் கடத்தி, தலை சுத்திருச்சு என நிற்கும் தைரியக்காரருக்கு மத்தியில் முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே தி.மு.க. காரன்.நான் தி.மு.க.காரன்! என்று பொளேர் அடி கொடுத்து ட்விட் செய்தார் உதயநிதி ஸ்டாலின்.

 ரஜினியை நெற்றிக்கு நேராக பொட்டில் அடித்தாற்போல் தாக்கி உதயநிதி கொடுத்திருக்கும் இந்த ஷாக்கானது அரசியல் அரங்கை அதிர வைத்துள்ளது. ஸ்டாலின் சம்மதத்துடன் தான் உதயநிதி இப்படியெல்லாம் பேசுகிறாரா? அல்லது தான் தோன்றித் தனமாகபேசுகிறாரா? என்று சந்தேகங்கள் வழுக்கத் துவங்கிவிட்டன. இந்த நிலையில், உதயநிதியின் இந்தப் போக்கு குறித்து ஓப்பன் டூப்பனாய் பேசும் அரசியல் விமர்சகர்கள்...”உதயநிதி ஸ்டாலின் சினிமாவுக்கு வந்து சில வருடங்களாகிவிட்டது, ஒரு சில படங்கள் கை கொடுத்ததே தவிர பெரிய புகழ் கிடைக்கவில்லை. அதேபோல் அவர் நேரடி அரசியலுக்குள் நுழைந்து சில மாதங்கள் ஆகிவிட்டது. 

சினிமா போல் இங்கும் சறுக்கிவிடக்கூடாது! என்று நினைக்கிறார். அதனால் சட்டென டேக் ஆஃப் ஆக நினைப்பவர், இப்படி ரஜினியின் முதுகை தனக்கான ஏணியாக பயன்படுத்திக் கொள்கிறார். ரஜினியை  விமர்சனம் செய்தால் பத்திரிக்கை மற்றும் மீடியாக்களில் தன் பெயர் பரபரவென அடிபடும், ரஜினியின் ரசிகர்கள் தன்னை சாடுவார்கள், அதற்கு தனது தரப்பு பதில் சொல்லும், ரஜினியின் வெறி ரசிகர்கள் தன் உருவ பொம்மையை கொளுத்தக் கூட செய்வார்கள். இவற்றின் மூலம் அடிக்கடி லைம் லைட்டுக்கு வந்தும், செலவில்லாமல் பெரும் விளம்பரங்களைப் பெற்றும், எளிதில் அரசியலில் பீக்கிற்கு போகலாம்! என்பதே உதயநிதியின் எண்ணம். அதனால்தான் குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை எதிர்த்து தி.மு.க. பேரணி நடத்திய சமயத்தில், ரஜினியை ‘வயதானவர்’ என்று சொல்லி வம்பிழுத்த உதயநிதி, இதோ இப்போது இப்படி ’கால்பிடித்து காலம் கடத்தியவர்’ என்று போட்டுத் தாக்கியிருக்கிறார். ரஜினியை உரசினால், தனக்குதான் லாபம் என்பது உதயநிதிக்கு தெரியும்.” என்று விளக்கம் கொடுக்கின்றனர். தம்பி தெளிவுதான் போல!