ரிப்பீட் ஆகும் ‘அபூர்வ ராகங்கள்’: மலேசியாவில் கமலுடன் இணைந்து அரசியல் கள கதவைத் திறக்கும் ரஜினி...!
அபூர்வ ராகங்கள் - படத்தை எவரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. கே.பாலசந்தர் இயக்கிய படம். மேடையில் மிருதங்கம் வாசித்துக் கொண்டிருக்கும் கமல் ஹாசன். வெளியே அரங்கத்தின் வெளி கேட் கதவைத் திறந்து கொண்டு ஒரு கறுப்பு கோட் போட்டுக் கொண்டு உள்ளே வருவார் ரஜினி.
இந்தக் காட்சி, தமிழ்த் திரையுலகுக்கு ஒரு வித்தியாசமான கலைஞனைக் காட்டியது. கமலும் ரஜினியும் இணைந்து நடித்த காட்சியைப் போல், கே.பாலசந்தர் இயக்கிய காட்சியைப் போல், தற்போது அடையாளம் தெரியாத ஒரு முகம் இயக்க, கமலும் ரஜினியும் போட்டி போட்டு அரசியல் களத்துக்கு இறங்குகிறார்கள்.
அரசியல் குறித்து இருவரும் பேசிக் கொண்டுதான் வருகிறார்களே தவிர, இருவருமே இன்னும் களத்தில் இறங்கவில்லை. கமல் முன்னதாகவே தன் அரசியல் கருத்துகளால் பரபரப்பை ஏற்படுத்தி, நற்பணி மன்றம், மொபைல் ஆப்ஸ், இணையதளம் என்று முந்திக் கொண்டார். அவர் ஏற்படுத்திய பரபரப்புக்குப் பின்னர்தான், ரஜினி தன் திரையுலகப் பிரவேசம் போலவே தாமதமாகக் கருத்துக் களத்தில் குதித்துள்ளார். அவர் பாணியிலேயே ரசிகர் மன்றத்தை முன்வைத்து, இணையதளம், மொபைல் ஆப் என்று இறங்கிவிட்டார்.
ரஜினியின் அரசியல் அறிவிப்பு கமலுக்கு சற்று எரிச்சலைத்தான் தந்திருக்கும். ஆனாலும் அரசியல் நாகரிகம் கருதி, மனமகிழ்ச்சியுடன் வரவேற்று டிவிட்டரில் போட்டார். ஆனால், இருவருக்கும் இடையேயான பேச்சின் வெளிப்பாடு, சென்னை அடையாறில் சிவாஜி நினைவு மண்டபத் திறப்பு விழாவில் ரஜினி பேசிய பேச்சில் நன்றாகத் தெரிந்தது.
கமல் தன் பகுத்தறிவுப் பாதையை முன்வைத்து கேரள முதல்வர், மேற்கு வங்க முதல்வர், தில்லி முதல்வர் என சந்தித்து துவக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், கடந்த ஒரு மாதத்துக்கும் மேல், பேச்சு மூச்சு எதுவும் இல்லாமல் அமைதியாகிவிட்டார்.
இப்போது ரஜினியின் முறை. இவரும் அறிவிப்புதான் வெளியிட்டுள்ளார். அதுவும் ஆன்மிக அரசியல் களம் கண்பதாக! ஆனால், இன்னும் அரசியலில் களமாடவில்லை.
இப்போது அபூர்வ ராகங்கள் காட்சி திரும்புகிறது. தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ஜனவரி 5, 6 ஆம் தேதிகளில் பிரமாண்ட நட்சத்திரக் கலைவிழா மலேசியாவில் நடைபெறவுள்ளது. இதில் ரஜினி - கமல் இருவரும் கலந்து கொள்கின்றனர். தமிழக அரசியலில் புயலைக் கிளப்பி வரும் இருவரின் அரசியல் அறிவிப்புக்குப் பிறகு முதன்முறையாக சந்திப்பதால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
மேடையில் கமல் இருக்க, கதவைத் திறந்து கொண்டு உள்ளே வரும் ரஜினியின் கதாபாத்திரத்தை இப்போதே ரசிகர்கள் கண்ணை மூடிக் கண்டு கொள்ளலாம்.