நெல்லையில் இதுகுறித்து பேசிய அவர், ’’சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் அவரை அதிமுகவில் மீண்டும் இணைப்பது குறித்து முதல்வரும் துணை முதல்வரும்தான் முடிவு செய்வார்கள். ஆனால், அவர் அதிமுகவை தவிர்த்துவிட்டு வேறு எந்த கட்சியிலும் இணையமாட்டார்.

சசிகலாவை கட்சியில் இணைப்பது குறித்து முதல்வர், துணை முதல்வரின் முடிவு செய்வார்கள். அவர் முதலில் வெளியே வரட்டும். அவர் சிறையிலிருந்து அவர் விரைவில் வெளியே வரவேண்டும் என்பதுதான் என்னைப் போன்றோரின் எண்ணம். அவர் திமுகவால் பழிவாங்கப்பட்டு இருக்கிறார். 'அம்மா, சின்னம்மா' மீது திமுகதான் பொய்வழக்கு போட்டார்கள். என்னதான் அவர்கள் வழக்கு போட்டாலும், இருவரும் தெய்வத்தின் முன்னால் நிரபராதிகள்.சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் வீட்டில் இருந்தாலும் இருப்பாரே தவிர வேறுகட்சிக்கு போகமாட்டார். இதுதான் என் மனசாட்சியின் கூற்று.

ராஜீவ்காந்தி கொலை குறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது தவறு. ராஜீவ்காந்தி கொலை தமிழகத்தில் நடந்திருக்கக் கூடாது. ஏன் ராஜீவ்காந்தி கொலையே நடந்திருக்கக் கூடாது. அவர் தமிழகத்தின் மீதும் தமிழ் மக்களின் மீதும் பற்று கொண்டவர். அவர் இந்திராகாந்தியின் செல்லப் பிள்ளை. அப்படி ஒருவரை கொலை செய்ததை நியாயப்படுத்திப் பேசுவது மடத்தனம். இது தமிழுக்கும், தமிழருக்கும் சீமான் செய்யும் இழுக்கு. இத்தகைய செயலை தமிழகத்தில் கட்சி நடத்துபவர்கள் யாரும் செய்யமாட்டார்கள். மானமுள்ள எந்த ஒரு மறத்தமிழனும் இதை செய்யமாட்டார்" என அவர் தெரிவித்தார். 

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தான் முதல்வராக முடிவெடுத்தார் சசிகலா. இதனை பொறுத்துக் கொள்ளாத ஓ.பி.எஸ் எதிர்ப்புத் தெரிவித்து ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் மேற்கொண்டார். சில எம்.எல்.ஏக்கள் ஓ.பி.எஸ் அணியில் திரண்டனர். இதனால் எம்.எல்.ஏக்களை தக்க வைக்க கூவாத்தூர் ரிசார்ட்டில் தங்க வைத்து பாதுகாத்தார் சசிகலா. அவர் மீதான வழக்கு தூசி தட்டப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். இதனால் அவரது முதல்வர் கனவு கானல் நீரானது. 

சிறை செல்வதற்கு முன் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக பதவியேற்கச் செய்தார். அதன் பிறகு சசிகலா குடும்பத்தை ஒதுக்கி விட்டு எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ் இணைந்து கட்சியையும், ஆட்சியையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் எடப்பாடியை விட ஓ.பி.எஸ் மீது சசிகலா மிகவும் கோபமாக இருந்து வருகிறார். ஒருவேளை சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்து அவர் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்பட்டால் ஓ.பி.எஸுக்கு அதிமுகவில் சிக்கல் ஏற்படலாம் என்றே கூறப்படுகிறது.